நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் தாக்கப்பட்டதைத் கண்டித்து யாழ். பஸ்தரிப்பு நிலையத்தில் நடாத்தப்படும் கண்டப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப. வசந்தகுமார் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் யாழ். பஸ் நிலையம் முன்பாக நாளை புதன் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டமானது வெறுமனே ஒரு தனிமனிதப் போராட்டமாக அல்லாமல் தமிழர்கள் ஒரு சிறிய அலகைக் கூட ஆட்சி செய்யக் கூடாது என்ற சிங்களத்தின் வெளிப்பாட்டிற்கு எதிரானதாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பௌத்த மேலினவாதச் சிந்தனையோடு, எம்மினத்தை அடிமைப் படுத்தி, இனத்தினடைய இருப்பை கேள்விக் குறியாக்குகின்ற இந்த நேரத்தில், சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் பலருடைய எண்ணங்களின் வெளிப்பாடாக நாளைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள இரக்கின்றோம்.
இப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் அனைத்து கட்சி சார்ந்தவர்களையும் இந்த தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அனைவரையும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்