முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதாகக் கிராமவாசிகள் கூறுகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக இரவில் தாங்கள் நித்திரையில்லாமல், யானைகளின் தொல்லையினால் நிம்மதியற்றிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் என்பவற்றை யானைகள் உடைத்துள்ளதாகவும், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 மூடைகள் வரையிலான நெல்லை இந்த யானைகள் சாப்பிட்டிருக்கின்றன. தென்னை, வாழை, மரவள்ளி பயிர்களையும் அவைகள் நாசம் செய்துள்ளன என்றும் கிராமவாசிகள் கூறுகிறார்கள்.
தென்பகுதியில் இருந்து இராணுவத்தின் உதவியோடு கொண்டு வரப்பட்டு முத்தையன்கட்டு பகுதியில் விடப்பட்டுள்ள யானை ஒன்று வீடுகளில் புகுந்து உப்பு மற்றும் சமைத்து வைத்துள்ள சோறு உட்பட உணவுகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு தென்பகுதியில் இருந்து ஒரு யானை கொண்டுவரப்பட்டதைக் கிராமவாசிகள் நேரில் கண்டுள்ளதாகவும:, இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் தாங்கள் கேட்டபோது, அவ்வாறான யானை ஒன்று மேலிடத்தின் உத்தரவுக்கமைய திங்கட்கிழமை கொண்டு வரப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.