சென்னை: கொலை வழக்கில், “பிடிவாரன்ட்’ வாபஸ் பெறவும், “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆஜராகவும் கோரி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தாக்கல் செய்த மனுவை, சென்னை, கூடுதல் செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.சென்னை, சூளைமேட்டில், 1986ம் ஆண்டு, இலங்கைத் தமிழர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், திருநாவுக்கரசு என்பவர் பலியானார். சம்பவம் தொடர்பாக, இலங்கையின் தற்போதைய அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட, 10 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு, நான்காவது, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் ஆஜராகாததால், டக்ளசுக்கு, “பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப் பட்டது. பின், தேடப்படும் நபராக, கோர்ட் அறிவித்தது. இந்நிலையில், டக்ளஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகம் வந்தால், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்; எனவே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக, அனுமதிக்க வேண்டும். பிடிவாரன்டை வாபஸ் பெற வேண்டும்’ என, கோரப்பட்டது.மனுவை, நீதிபதி ராஜகோபாலன் விசாரித்தார். டக்ளஸ் மனுவுக்கு, போலீஸ் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் பிரபாவதி, எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த, நீதிபதி ராஜகோபாலன் பிறப்பித்த உத்தரவு:அமைச்சர் டக்ளஸ் மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், அவரது அடையாளம் குறித்து, போலீஸ் தரப்பில், கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக, பிடிவாரன்ட்டும், நிலுவையில் உள்ளது.போலீஸ் தரப்பில் கோரியபடி, மனுதாரரை அடையாளம் காண வேண்டியதிருப்பதால், அவர் ஆஜராக வேண்டிய தேவை உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டியபடி, அவரை இன்னும் அடையாளம் காணாததால், வழக்கில் ஆஜராக, விலக்கு கோரிய மனுவும், தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி ராஜகோபாலன் உத்தரவிட்டுள்ளார்.