அரசாங்கம் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஆர்வம் காட்டுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியும் அரவது சகோதரர்களும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் போது எவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து எவ்வித உறுதிமொழிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மட்டுமே பாரர்ளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அரசாங்கம் இந்தியாவிற்கு வாக்குறுதிகள் அளித்த போதிலும் அவை உரிய முறையில் நிறைவேற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தராக தாம் ஆளுனரை நோக்குவதாகவும், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒர் மக்கள் பிரதிநிதியாக ஆளுனரை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் வட மாகாண ஆளுனர் திவிநெகும சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனோநிலை அரசாங்கத்திற்கு இல்லாத வரையில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாட்டம் காட்டுகின்றதா என்பது முதலில் தீர்மானிக்கப்பட வேண்டுமென சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.