இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய முல்லைத்தீவு துணுக்காய் வலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது, பாலிநகர் லோகநாதன் மற்றும் அதே ஊரைச்சேர்ந்த புலம்பெயர் உறவான இளையராஜா ஆகியோரின் அனுசரணையுடன், வன்னி பா.உறுப்பினர் வினோநோதராதலிங்கத்தின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது.
இதில் விருந்தினர்களாக பா.உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் பொதுசெயலாளருமான மாவை.சேனாதிராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பாண்டியன்குளம் பிரதேச சபையின் தலைவர் தனிநாயகம், துணுக்காய் பிரதேச சபையின் தலைவர் ராசரத்தினம் பிரதச சபைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சித்தி எய்திய மாணவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்களாலும் பெற்றோர்கள், நலன்விரும்பிகளாலும் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து, பாண்டியன்குளம் பிரதேச சபை உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
பா.உறுப்பினர் விநோநோதராதலிங்கம், பா.உறுப்பினர் ச.சிறீதரன் ஆகியோருடன் பிரமுகர்கள் பலரும் கருத்துக்களையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.
இங்கு பா.உறுப்பினர் மாவை.சேனாதிராசா சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில்,
மிகச்சிறந்த அறிவு பாரம்பரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் உரியவர்களாக எமது இனம் வாழ்ந்து இருக்கின்றது. பாரதி எனும் மகாகவி நமது சமுகம் தொடர்பாக அளப்பரிய கனவுகள் கண்டான். காணி நிலம்வேண்டுமென அவன் கவித்துவமியற்றினான்.
ஆனால் இன்று நாம் நலிவுற்ற சமுதாயமாக ஆக்கப்பட்டுள்ளோம். பல்வேறு நெருக்கடிகள் எமது நிலத்துக்கும் கல்விக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. எமது சிறந்த ஒழுக்கம் சிதைக்கப்பட்டு பலமிழந்த சமுகமாக எம்மை ஆக்கிவிட ஆட்சியாளர்கள் முயற்சி செய்கின்றார்கள்.
கல்வியை பொறுத்தளவில் கல்விக்கூடங்கள் சுதந்திரங்களை இழந்துள்ளன. இராணுவமேலாதிக்கம் நுழைந்து நிற்கின்றது. இதன் மூலம் எமது இயல்பு சிதைக்கப்படுகின்றது.
இன்று எமது சமுகத்தின் எல்லா பிரச்சினைக்கும் தேடிப்பார்த்தால் இறுதியில் இராணுவ மயமாக்கலே காரணம் என விடைகிடைக்கும். இதனதால்தான் இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
இதன் மூலமே எமது வழிவந்த ஒழுக்க நிலையை நாம் பேணமுடியும்.அதன் மூலம்தான் எமது கல்வியும் மீண்டும். உச்ச நிலைக்கு செல்லும். சென்ற ஆண்டை விட சித்தியெய்தியவர்களின் தொகையில் வீழ்ச்சி என்றால் காரணம் தேடிபார்க்க வேண்டும்.
இப்பொழுது போரில்லை ஆனால் போருக்கு நிகரான நெருக்குவாரங்கள் இருக்கின்றன. மிக மோசமான அடக்குறை நிகழ்கின்றது. எனவே இதை ஆட்சியாளர்கள் உணர்கிற பட்சத்தில்தான் எமது சமுகம் பல்வேறு துறைகளில் முன்னேறமுடியும்.
கல்விச் சமுகத்தில் இருக்கக்கூடிய நெருக்குவாரம் முழு சமுகத்தையும் பின்னடைவை நோக்கி இட்டுச்செல்லும். எனவே எமது உயர்ந்த கல்வி ஒழுகத்தை மேம்படுத்த வழிகளை நாம் காணவேண்டிய அதற்காக போராட வேண்டிய சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.