வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினர்களுக்கான மாதாந்த மற்றும் சிறப்பு கூட்டங்களில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கும் எதிர்வரும் கூட்ட அமர்வுகளில் இருந்து அனுமதிக்கப்படவுள்ளதாக நகர பிதா திரு நடராஜா அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான ஜனநாயகப் பண்பு நிறைந்த அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் , கூட்ட அமர்வுகளில் உறுப்பினர்களால் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களைஎடுக்கும் பொழுது அவை தொடர்பான விவாதங்களினூடாக மக்களின் நியாயப்படுத்துகையை வளர்ப்தற்கும் இளைய தலைமுறை உறுப்பினர்களிடையேயும் சிறந்த ஜனநாயகப் பண்புகளையும் கூட்ட நடைமுறைகளையும் அறிந்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கும் ஏற்ப சட்ட நடைமுறைகள் உள்ளதால் இந்த ஒழுங்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே செயலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு அமர்வுக்கும் 20 பேர் என்ற அடிப்படையில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. சபையின் கூட்டங்களுக்கு பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளமுடியுமே தவிர எவ்வித கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை.
மேற்படி கூட்டங்களில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் ,தமது முழுப்பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறித்து அலுவலகத்தில் இருந்து அதற்கான படிவத்தில் நிரப்பி பொது சன தொடர்பு அதிகாரியிடம் கையளிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.இந்த நடைமுறையானது உள்ளுராட்சி மறுசீரமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் பங்களிப்பை அதிகரித்தல் என்ற விதிமுறைககு அமைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் திரு அனந்தராஜ் தெரிவித்துள்ளார்