இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள்.
மிகமோசமான சண்டைகள் நடைபெற்ற புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலும், கிராமங்களிலும் உள்ள பல வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

பாம்புத் தொல்லை மீள்குடியேற்றம்

கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் கட்டிடங்களின் இடிபாடுகள், காணிகளில் படர்ந்துள்ள பற்றைகள், காடுகள் என்பவற்றில் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் பெட்டகம்

மோசமான ஒரு வறட்சியின் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதை அடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, பற்றைகள், புல் வளர்ந்துள்ள இடங்கள், காடாகக் கிடக்கின்ற காணிகளில் கண்ணிவெடிகள் மற்றும் பலதரப்பட்ட வெடிப்பொருட்கள் என்பன அகற்றப்படாமல் கிடப்பதனால், காணிகளில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கவலைப்படுகின்றார்கள்.

மிதிவெடிகள்

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்பே, இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், கண்ணிவெடிகள் காணிகளில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

தங்கள் காணிகளில் தாங்கள் பற்றைகள், காடுகளை அழித்துச் சுத்தம் செய்யும்பொது வெடிப்பொருட்கள் காணப்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அங்கு விரைந்து வருகின்ற இராணுவத்தினர் அவற்றை எடுத்துச்செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தக் கண்ணிவெடி ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட எஃப்.எஸ்.டி என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹார்ட்நட் தொம்ஸ், இங்கு ஒவ்வொரு சதுர மீட்டர் நிலமும் ஆய்வு செய்யப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்றும், வீடுகள், கிணறுகளின் உட்பக்கங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை குறிப்பிட்ட திகதிக்குள் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கண்ணிவெடிகளை அகற்றி குறிப்பிட்ட பிரதேசங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தாங்கள் கண்ணிவெடி அகற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

“கண்ணிவெடி அகற்றியவர்களினால் கண்டுபிடித்து அகற்றப்படாத கண்ணிவெடிகள் வெடிப்பொருட்கள் தமது காணிகளில் இருக்கின்றன, அதனால் அங்கு வெடிப்பொருள் ஆபத்து இருக்கின்றது என்று மீள்குடியேறியுள்ள ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள்.

அதேவேளை, தமது நிறுவனம் கண்ணிவெடி அகற்றிய புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை” என்று ஹார்டநட் தொம்ஸ் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்ற வேண்டியிருக்கின்றது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

நன்றி BBC

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *