தேசியத் தலைவர் கட்டிக்காத்த தமிழர் கல்வியும் சிறீலங்கா சீரழிக்கும் தமிழர் அறிவியல் வளமும்.- தாயகத்தில் இருந்து வீரமணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர் தமிழ் மாணவர்களின் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்களின் கல்வியை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களை அறிவியல் ரீதியாகப் பின்னடையச் செய்யலாம் என்று சிங்கள தேசம்கனவு காண்கிறது. அறிவியல் ரீதியிலான பின்னடைவு தமிழர்களின் அரசியல் சிந்தனையை மழுங்கடிக்கும் என்றும் அது தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்கும் என்றும் சிங்களப் பெரும்பான்மை சிந்திக்கின்றது.

இதற்காகவே தமிழர் தாயகத்தின் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் கல்விக்கான ஒதுக்கீடுகளைக் குறைப்பதுடன், ஆசிரிய நியமனங்களையும் இழுத்தடித்து வருகின்றது. தமிழர் தாயகத்தின் முக்கியமான கல்விப் புலமான வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதனால் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வி பெரும் பின்னடைவை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அண்மையில் மூவாயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் விஞ்ஞானம் 500, கணிதம் 500, ஆங்கிலம் 1000 மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 1000 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் புதியவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 90 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் ஆசிரிய நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மேற்படி ஆசிரிய நியமனங்களில் வடமாகாணப் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் 45, கணிதம் 45, ஆங்கிலம் 90, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 90 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவேண்டிய நிலையில் விஞ்ஞானம் 5, கணிதம் 36, ஆங்கிலம் 5, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 56 என்ற எண்ணிக்கையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில், குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மடு மற்றும் வவுனியா கல்வி வலயங்களிலும் மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிகளவான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி கற்பிக்க முடியாதுள்ளதாக இங்குள்ள பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் இதற்குரிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை.

சிங்கள இனவெறி அரசாங்கங்கள் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு யுத்தத்தை நடத்திய போதிலும் வட மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்கள் தமது கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டல். கடந்த முப்பது வருட காலமாக வடக்கு கிழக்கில் தமிழர் தாய கத்திலுள்ள பாடசாலைகளுக்கு அரசாங்கம் இதே போன்றே ஆசிரிய வளம் உட்பட கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கவில்லை. தென்னிலங்கைப் பாடசாலைகளுக்கு ஒதுக்குவதைப் போன்று தமிழர் தாயகத்திலுள்ள பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை.

ஆயினும் தமிழீழ தேசியத் தலைவர் நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதியிலிருந்து நியமிக்கப்பட்ட தொண்ட ராசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையாலேயே தமிழ் மாணவர்களின் கல்வி இன்றுவரை பாதுகாக்கப்பட்டது. சிங்களவரின் இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அதனையும் முறியடித்து தமிழ் மக்களையும் நிலங்களையும் பாதுகாத்துக்கொண்டு கல்வி, கலை, கலாசாரங்களையும் பாதுகாக்குமாறு தலைவர் பிரபாகரன் போராளிகளுக்கும் அரசியல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அவர்களும் செயற்படுத்தினர்.

குறிப்பாகக் கல்விக்கென்றே தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ கல்விக் கழகம் தமிழீழ மாணவர்களின் கல்வியைக் கண்காணித்து வந்தது. கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. அன்றைய காலத்திலேயே புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய நிதியில் பெருந்தொகை நிதியைத் தலைவர் கல்விக்குச் செலவிட்டார்.

இதன்மூலம் தமிழ் மாணவர்கள் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். புலிகள் சிறுவர்களைக் கடத்திச் சென்றும் பிடித்துச் சென்றும் போராட்டத்திற்கு இணைத்துக் கொண்டார்கள் என்றும் பாடசாலை மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள் என்றும் அப்போதும் இப்போதும் அறிக்கைகள் விட்ட, அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்போர் புலிகள் செய்த சேவைகளைப் பற்றிக் கதைக்க மறுக்கிறார்களே அது ஏன்? யாராக இருந்தாலும் புலிகளை எப்படிக் குற்றஞ்சாட்டலாம் என்றுதான் சிந்திக்கின்றனரே தவிர, புலிகள் எதற்காக போராடினார்கள் எதற்காக யுத்தம் செய்தார்கள் என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.

கல்வி கற்று உயர் பதவிகளை அலங்கரிக்க வேண்டிய பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தாங்களாக முன்வந்து விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். அவர்கள் சிறுவர்கள் அல்ல. பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள், பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு திறமை இருந்தது. சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. தங்கள் நிலைமைகளைச் சிந்தித்தார்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

தமிழ் மாணவர்களின் கல்வியைச் சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு அழித்ததால்தான் அவர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். சிங்களப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு நடைமுறைகளையும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு இன்னொரு நடைமுறைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கையாண்டதாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தாங்களாக போராட்டத்தில் இணைந்துகொண்டனர். குறிப்பாக சிங்கள அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையானது தமிழ் மாணவர்களைப் பெரிதும் பாதித்தது. இதனால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்கினர்.

இவை இவ்வாறிருக்க தான் விதைத்த வினையை தான் அறுத்துக்கொண்டிருந்த சிங்கள இராணுவமும் சிறிலங்கா அரசும் தான் தனித்து நின்று புலிகளுடன் போராடிய போது தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்ற கட்டுக்கதையை சர்வதேசத்திற்கு பரப்பியது. இதன் அடிப்படைகளை அலசி ஆராய லாயக்கற்ற சர்வதேச நாடுகளும் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தன. எப்படியாயினும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே சிறீலங்கா அரசினதும் அதன் சில நேச நாடுகளுக்கும் அவசியமானதாக இருந்தது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தில் இணைய வந்த ஏராளமான சிறுவர்களை புலிகள் வீடு தேடிச் சென்று ஒப்படைத்துவிட்டு வந்தனர். தாயகத்திலுள்ள தமிழ் மக்களுக்கு இந்த விடயங்கள் தெரியும். புலிகளின் போராட்ட நியாயப்பாடுகளை அறிந்துகொண்ட சில வெளிநாடுகளுக்கு கூட இந்த விடயங்கள் தெரியும். ஆனால் தமிழ் மக்களிடம் நேரடியாக வந்து விசாரணைகளை நடத்தாமல் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை விடுகின்ற செயற்பாடுகளையே சிங்களமும் அதன் நேச நாடுளும் இதுவரை மேற்கொண்டு வந்தன.

சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் கடந்த காலங்களைப் போன்றே போர் முடிந்த தற்போதைய காலத்திலும் நடைபெற்று வருகின்றன. தமிழ் மாணவர்களின் கல்வியைப் புறக்கணிப்பதன் மூலம் தான் தனது நலன்களை அடையலாமென்று சிறீலங்கா அரசாங்கம் நினைக்கிறது. ஆயினும் தமிழ் மாணவர்களின் கல்வியை அழிப்பதனூடாக அரசாங்கம் இரண்டு இலக்குகளை அடைய நினைக்கிறது. ஒன்று தமிழ் மாணவர்களின் கல்வியை அழித்து நீண்ட கால நோக்கில் தமிழர்களின் அறிவியல் சக்தியை இல்லாதொழிப்பது.

இரண்டாவது, தமிழ் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படுகின்ற நிதியைச் சுரண்டுவது. இது இரண்டையும் சிறீலங்கா அரசு மிக நேர்த்தியாகவே செய்து வருகின்றது. வருடாந்த வரவு – செலவில் ஒதுக்கப்படுகின்ற நாடளாவிய ரீதியிலான கல்விக்கான நிதியில் பெருமளவு நிதி வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கென்று ஒதுக்கப்படுகின்றது. ஆனால், மேற்படி மாகாணங்களில் உள்ள தமிழ் அதிகாரிகளும் தமிழ் கணக்காளர்களும் வெற்றுக் காகிதங்களில் தினமும் கையப்பமிட்டுக் கொடுக்கின்றனர். இந்த நிதி சிங்கள அரசியல்வாதிகளின் கைகளுக்கு நேரடியாகவே செல்கின்றது.

தமிழ் அதிகாரிகளும் என்ன செய்வார்கள் பாவம். வெளியே சொன்னால் வேலை பறிபோய்விடும். பதவியுயர்வுகள் கிடைக்காது. தண்ணீர் இல்லாக் காடுகளுக்கு இடமாற்றம். இது எல்லாவற்றையும் விட வெற்றுக் காகிதத்தில் கையப்பம் இடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த தில்லுமுல்லுகளைப் பகுத்து ஆராய்ந்து பாடம் படிப்பிக்க முடியாத சர்வதேச நாடுகளின் அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் புலிகள் தான் ஏதோ இல்லாததைச் செய்தார்கள் என்று தூக்கிப் பிடிக்கிறார்கள்.

இந்த மோசடிகளை தமிழ்த் தேசிய ஊடகங்கள் அம்பலப்படுத்தினால் அதிகாரிகளின் காதுகளில் அவை ஏறாது. ஏனெனில் இந்த ஊடகங்கள் புலி ஆதரவு ஊடகங்கள் என்ற பார்வை அதிகாரிகளுக்கு இருக்கின்றது. நாங்கள் புலிகளுக்கு சார்பாக எதையும் பிரசுரிக்கவில்லை, எழுதவில்லை. தாயகத்தில் நடப்பவற்றை தாயகத்திலிருந்துகொண்டே எழுதுகின்றோம்.

சுர்வதேச நாடுகளே தமிழர் தாயகத்தில் நடக்கின்ற அநீதிகளை இனியாவது தட்டிக் கேளுங்கள். உங்கள் உறவுகளைப் போன்றவர்கள் தான் தமிழர்கள். தமிழர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. இந்தப் பூமியில் சமத்துவமாய் வாழ்வதற்கே தமிழர்கள் விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நீங்கள் இனியாதல் நிறைவேற்றுங்கள்.

நன்றி : ஈழமுரசு

 

 

Leave a Reply

Your email address will not be published.