கடும் புயல் காற்று, பேய் மழை,இரண்டடி உயர பனிப் பொழிவு என பயமுறுத்திக் கொண்டிருக்கிறது சேண்டி சூறாவளி.
அமெரிக்காவின் வட கிழக்குபகுதியிலுள்ள நியுஜெர்சி நகரின் ஷிப்பாட்டம் பகுதியில் தான் இந்த சூறாவளி கடக்க இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகிறது.
கரிபீயன் தீவுகளில் துவங்கி வேகமாக வந்துக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி வரு செவ்வாயன்று டெலாவேர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனுடைய ஆக்ரோஷம் குறைந்தாலும் கிழக்கு கரையை அது கடப்பதற்குள் நிலப்பகுதியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சூறாவளி காற்று மணிக்கு 75கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அதன் சீற்றத்தை 100 கிலோமீட்டர் தள்ளி வசிப்பவர்களாலும் உணர முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மற்றும் நியுஜெர்சி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. சில நாட்கள் மின்சாரம் இல்லாமல் போக வாய்ப்பிருப்பதால் அந்தப் பகுதி மக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். விமானச் சேவை நேரங்களும் மாற்றியமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
கடந்த முறை பெரிய பாதிப்புக்குள்ளாக்கிய ஐரீன் புயலைவிட இந்த புயல் பலம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஐரீன் புயல் 15பில்லியன் டாலர் பாதிப்பை ஏற்படுத்தியது. தெற்கு நியூஜெர்சியை ஒட்டியிருக்கும் தீவுகளில் குடியிருக்கும் மக்களை ஞாயிறு மதியத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லியிருக்கிறார்கள்.