புலிகள் சார்பாக வழக்கில் வாதாடுவதற்கு இயக்க பிரதிநிதிக்கு இந்தியாவில் அனுமதி! நீதிபதி அதிரடி உத்தரவு

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், சுவிட்சர்லாந்தில் தற்போது வசித்துவரும் விஜயரட்னம் சிவநேசன் விடுதலைப்புலிகள் சார்பாக நீடிப்பினை எதிர்த்து மனு சமர்ப்பிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், 1992 முதல் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிபதி ஒருவர் தலைமையிலான தீர்ப்பாயம் தடை அவசியமா என்பது குறித்து விசாரித்து, விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசு ஆணை செல்லுமா இல்லையா என தீர்ப்பு கூறும்.

தடை செல்லும் என்றே இதுவரை தீர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படியே கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதுகுறித்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் அத்தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது. அப்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரட்ணம் சிவநேசன் என்பவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் என்று மனு சமர்ப்பித்துள்ளார்.

ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தான் பாடுபடுவதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கைத் தமிழர் உரிமைக்காக பாடுபட்டது, தற்போது இந்தியாவில் அதன் செயல்பாடு எதுவுமில்லை. அந்நிலையில் இந்தியாவில் அதன் மீதான தடை நீக்கப்படவேண்டும் எனக் கோரி அவர் எழுதியிருந்த மனுவினை அவர் சார்பில் சென்னை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.

அவர் சார்பாக தீர்ப்பாயத்தின் முன் தன்னை வாதாடுமாறு கோரி சிவநேசன் எழுதியிருந்த கடிதத்தினையும் ராதாகிருஷ்ணன் நீதிபதியிடம் கையளித்தார்.

சிவநேசன் குறித்து விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில் சிவநேசனின் மனு ஏற்கப்படக்கூடாது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிபதி வி.கே.ஜெயின் சிவநேசன் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என உத்தரவிட்டார்.

தீர்ப்பாயம் இப்போது தான் தடையினை எதிர்த்து விடுதலைப்புலிகள் சார்பாக வாதிட ஒருவரை அனுமதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பாயத்தின் விசாரணை தொடரும்.

Leave a Reply

Your email address will not be published.