முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் உட்புகுந்ததால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தாழ் நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறிய பொது மக்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சடைந்துள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக முல்லைத்தீவின் இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, ஆனந்தரபுரம், திருமுறிகண்டி, இந்துபுரம், கேப்பாபுலவு, கொக்கிளாய், கருணநாட்டுக்கேணி போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுகளிலுள்ள தாழ்நிலங்கள் யாவும் தொடர்ச்சியான மழை காரணமாக மழை வெள்ளத்தால் நிறைந்துள்ளன. அத்தோடு சில இடங்களில் வீதிகளுக்கு மேலாக மழைநீரான பாய்ந்து செல்கின்றது.
மழை வெள்ளைத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவின் பகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி.வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன், பாண்டியன் குளம் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.செந்தூரன், கொக்குவில் கல்வாரி பூரண சுவிசேஷ தேவாலயப் யாழ். நிறைவேற்றுப் போதகர் வண.வீ.கனகராஜா உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொக்குவில் கல்வாரி பூரண சுவிசேஷ தேவாலயத்தினால் நிமல்ராஜன் ஞாபகர்த்த அமைப்பின் ஊடாக வழங்கிய ஒரு தொகுதி பிஸ்கட், பால்மா என்பவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழங்கினார்.
இதேவேளை முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக பாரிய அலைகள் எழுந்த வண்ணம் உள்ளதோடு தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. மேலும் கடும் குளிரும் நிலவுகின்றது.
இதன்காரணமாக அண்மையில் மீளக்குடியமர்ந்த பொது மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக தற்காலிக வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த பொது மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட விடயங்கள் எவையும் இன்னமும் உரியவாறு செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையிலும் பொது மக்களுக்கு இராணுவத்தினர் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்.
தற்போது நிலவும் காலநிலையானது அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடித்தால் முல்லைத்தீவு மாவட்டமானது பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.