முள்ளிவாய்க்கால் பேரழிவும், சிங்கள தேசத்தின் மாறாத இன மேலாதிக்க வன்முறையும் ஈழத் தமிழர்களது அரசியல் களத்தை இன்னொரு திசை நோக்கி நகர்த்தி வருகின்றது. தற்போது நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சீனத் தூதரின் சந்திப்பும் அத்தகையதொரு நிர்ப்பந்தம் காரணமாக அமைந்தது எனலாம்.
காலா காலமாக இந்தியாவின் கரங்களைப் பற்றியபடியே தம் எதிர்கால நம்பிக்கையை வளர்த்துக்கொண்ட ஈழத் தமிழினம், அதற்காகப் பெரும் விலையையும் செலுத்தவேண்டிய துர்ப்பாக்கியத்தையும் தரிசித்தது. இந்தியாவின் எதிரிகளைத் தமது எதிரிகளாகப் பாவனை செய்து கொண்டு, இந்தியாவுக்கு அப்பால் எந்தவொரு நட்பு வட்டாரத்தையும் கொண்டிருக்காத நிலையில், இந்தியாவும் சேர்ந்தே ஈழத் தமிழினத்தை கொன்றொழித்த வரலாற்றுத் துரோகம் எம் கண்முன்னேயே நடந்தேறியது.
இந்தியா தனது இரத்தக் கறை படிந்த கைகளை மறைத்தபடியே, ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக இப்போதும் நம்ப வைக்கப் பிரயத்தனம் செய்கின்றது. தன்னை நியாயாதிக்கம் கொண்ட தரப்பாக நிலைநிறுத்தும் பொருட்டு, சில நகர்வுகளையும் காட்சிப்படுத்துகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை டெல்லிக்கு அழைத்துப் பேசிய இந்திய ஆட்சியாளர்கள், அதனால் எழுந்த சிங்களப் பதற்றத்தைத் தணிப்பதற்காக கோத்தபாயாவை அழைத்துத் தாஜா செய்துள்ளது.
இந்திய ஆட்சியாளர்களது இந்த இரட்டை அணுகுமுறை எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதாகவே இருக்கப்போகின்றது. இந்தியாவைத் தாண்டிய நட்பு வட்டாரத்தைத் தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஈழத் தமிழர்களுக்கு உருவாகியுள்ளது. அது சீனாவாகவும் இருக்கலாம். பாகிஸ்தானாகவும் இருக்கலாம். அதில் தப்பேதும் கிடையாது. இந்திய நம்பிக்கை என்ற ஒற்றைச் சிதையில் நின்றுகொண்டு, எமக்கு நாமே தீ மூட்டிக்கொள்ள முடியாது.
ஈழத் தமிழர்கள் என்பதில் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களையும் இந்திய ஆட்சியாளர்கள் தேவைக்கான பகடைக் காய்களாகவே பாவித்து வருகின்றனர். காவிரி நதி நீர் பிரச்சினை ஆகட்டும், தமிழக மீனவர்கள் மீதான சிங்கள வன்முறைப் படுகொலைகள் ஆகட்டும் அவற்றை இந்திய தேசத்திற்கான அச்சுறுத்தலாக இந்திய ஆட்சியாளர்கள் கருதுவதில்லை. அதனால் எழுந்துவரும் எதிர்கால அச்சங்கள் தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சியைப் பலப்படுத்தி வருகின்றது.
மிகப் பெரும் ஊழல் சாம்ராஜ்யமாக அடையாளம் காணப்படும் இந்திய ஆட்சி முறையில் மாநில வாரியான வெடிப்புக்கள் உருவாகுவதற்கு அதிக காலம் எடுக்கப் போவதில்லை. எனவே, தமிழீழ மக்கள் இந்தியக் கனவுகளைத் தவிர்த்து, அதற்கும் அப்பால் தங்களுக்கான நட்பு வளையத்தைத் தேடவேண்டும். அதுவே கூட, இந்தியாவை நேர்வழியில் சிந்திக்கத் தூண்டும் ஆக்க சக்தியாகவும் அமைந்து விடலாம்.