இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய விமர்சனம் வெளியிட்டுள்ளது. நீதித்துறைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரித்தானிய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறைச் சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தண்டனை விதிக்கும் பொறிமுறைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது . யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரியுள்ளது.
கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.