ஊகத்தின் நதிமூலம் – அவிழ்க்கப்படும் முடிச்சு 02 – சேரமான்

ஊகத்தின் அடிப்படையிலா? அல்லது நிர்ப்பந்தத்தின் காரணமாகவா? தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புக்கு முடிவு கட்டும் அறிவித்தலை 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாளன்று கே.பி வெளியிட்டார் என்ற கேள்விகளோடு எமது கடந்த தொடரை நிறைவு செய்திருந்தோம். உண்மையில் கே.பி வெளியிட்ட இந்த அறிவித்தலின் பின்னணியில் முழுமையான ஊகமே இருந்தது: இதில் ஓரளவு நிர்ப்பந்தமும் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால் கே.பி மீதான நிர்ப்பந்தத்தின் பின்னணியைப் பார்க்கும் முன்னர், கே.பியின் ஊகத்திற்கான நதிமூலங்களை நாம் ஆராய்வது பொருத்தமாக இருக்கும். இப்பத்திகளில் நாம் அடிக்கடி அடித்துக் கூறுவது போன்று 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் செய்கோள் தொலைபேசியூடாக உரையாடியதன் பின்னர் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் எச்சந்தர்ப்பத்திலும் கே.பி உரையாடியதில்லை.

1990களின் முதற்கூறில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஆயுதக் கொள்வனவு – வழங்கல் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பொழுதும் சரி, பின்னர் 1996 ஆம் ஆண்டின் இறுதியில் லோறன்ஸ் திலகர் அவர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து அனைத்துலக செயலகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொழுதும் சரி, கே.பியிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே விளங்கியது.

1995ஆம் ஆண்டின் இறுதிவரை யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இயங்கிய பொழுது, கப்பல்களில் பயன்படுத்தப்படும் ரெலெக்ஸ் கருவிக்கு ஒப்பான தொலைத்தொடர்புக் கருவிகள் ஊடாகவே வெளிநாட்டு வலையமைப்புக்களுக்கான பணிப்புரைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் வன்னிக்கு நகர்த்தப்பட்ட பின்னரும் 1997ஆம் ஆண்டின் இறுதிவரை இதே தொலைத்தொடர்பு பொறிமுறையே கையாளப்பட்டு வந்தது.

ஆங்கிலத்தில் சங்கேத மொழியில் அனுப்பி வைக்கப்படும் இப்பணிப்புரைகள் ஐரோப்பிய நாடொன்றில் வைத்து வழமைப்படுத்தப்பட்டு பின்னர் கே.பியின் தலைமையில் இயங்கிய அனைத்துலக செயலகத்தின் மறுமுகங்களாக விளங்கிய வேலும்மயிலும் மனோகரன் (மனோ), தர்மலிங்கம் சர்வேந்திரா (சர்வே) ஆகியோர் ஊடாககிளைகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டன. இத்தொலைத் தொடர்புப் பொறிமுறைக்கு மாற்றீடான சில பொறிமுறைகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த பொழுதும்கூட, இவை அதிமுக்கிய விடயங்களான தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை வெளியிடுவது போன்ற காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

எனினும் ஐரோப்பிய நாடொன்றில் இயங்கிய போராளி ஒருவரால் 1997ஆம் ஆண்டின் இறுதியில் வன்னிக்கு செய்
கோள் தொலைபேசிகள் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, 1998ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து செய்கோள் தொலைபேசி ஊடாக தமது வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுக்கான பணிப்புரைகளை அனுப்பும் நடைமுறையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை கையாளத் தொடங்கியது. இக்காலப்பகுதியிலேயே தலைவருடன் செய்கோள் தொலைபேசியில் கே.பி உரையாடக்கூடிய சூழல் ஏற்பட்டது.

ஆனாலும் செய்கோள் தொலைபேசியில் உரையாடுவதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு, அதிமுக்கிய விடயங்கள் தவிர்ந்த பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குமாரவேல் என்ற போராளி ஊடாகவே கே.பியுடனான தொடர்பாடல்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பேணி வந்தார். தவிர, தளபதி சூசை, தளபதி சொர்ணம், அப்பொழுது தமிழீழத்தில் வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவுக்குப் பொறுப்பாக விளங்கிய வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ஆகியோர் ஊடாகவும் கே.பியிற்காக பணிப்புரைகளைத் தலைவர் வழங்கி வந்தார்.

எனினும் செய்கோள் தொலைபேசி ஊடாக உரையாடுவதில் இருக்கக்கூடிய பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற் கொண்டு 2003ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கே.பி உட்பட வெளிநாடுகளில் அப்பொழுது இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் உரையாடுவதை கூடிய அளவிற்கு தலைவர் அவர்கள் தவிர்த்து வந்ததோடு, பெரும்பாலான பணிப்புரைகளை அவர்களுடன் தாயகத்தில் தொடர்பில் இருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் ஊடாகவே வழங்கி வந்தார். இதற்காக வெளிநாட்டில் இருந்த எவருடனும் தலைவர் அவர்கள் உரையாடவில்லை என்று நாம் கூறவில்லை.

அதிமுக்கிய சந்தர்ப்பங்களில் தேசத்தின் குரல் பாலா அண்ணை அவர்களுடன் அடிக்கடி தலைவர் உரையாடுவதுண்டு: இதேபோன்று வேறு சில போராளிகளுடனும் தலைவர் அவர்கள் உரையாடியதுண்டு.
ஆனால் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுக்கான பொறுப்பிலிருந்து 2003ஆம் ஆண்டின் முதற்கூறில் கே.பி அகற்றப்பட்ட பின்னர், அவருடன் தலைவர் அவர்கள் அரிதாகவே உரையாடியிருந்தார். ஒருவிதத்தில் ஓய்வூதியம் பெற்ற ஒருவர் போன்று சகல வேலைத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட ஒருவராகவே 2008இன் இறுதி வரை கே.பி விளங்கினார்.

பின்னர் 2008ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தளபதி சொர்ணம், தளபதி சூசை, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோர் ஊடாகவே தலைவரின் பணிப்புரைகள் கே.பியை சென்றடைந்தன.

இவ்வாறான பின்புலத்தில் 2009ஆம் ஆண்டு சனவரி மாத இறுதியிலும், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளர் என்ற கோதாவில் கோலாலம்பூரில் வைத்து வெளிநாட்டு இராசதந்திரிகளுடன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தைகளை கே.பி நிகழ்த்தத் தொடங்கினார். இப் பேச்சுக்களில் கே.பியின் ஆலோசகர்களான வி.உருத்திரகுமாரன் (அமெரிக்கா), ஜோய் மகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), அவரது உதவியாளர்களான இன்பம் (கனடா), பொறி (மலேசியா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படியான சந்திப்புக்களில் ஒன்று அப்பொழுது கொழும்புக்கான நோர்வேத் தூதுவராக விளங்கிய ரோர் ஹற்ரெம் அவர்களுடன் இடம்பெற்றது. இதில் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதி என்ற கோதாவில் அமெரிக்க அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார்.

இவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சைச் சேர்ந்தவர் அல்ல. பா.நடேசன் அவர்களுடன் உருத்திரகுமாரனின் உதவியாளரான வழுதி (பொபி அல்லது பரந்தாமன்) ஊடாக தொடர்பை ஏற்படுத்திய ஜேம்ஸ்கிளாட் அவர்களின் கீழ் இயங்கிய பாதுகாப்புத்துறை அமைச்சைச் சேர்ந்தவர். ‘தந்திரிகளின் மறுமுகம்’ தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டமை போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுக்கும், சரணடைவுக்குமான திட்டம் இச்சந்திப்பில் கே.பி – உருத்திரகுமாரன் தரப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கிளிநொச்சிக்கான யுத்தம் உக்கிரமடைந்த பொழுது வன்னிக்குப் பயணம் செய்வதற்கான நிபந்தனையாக இத்திட்டத்தையே பா.நடேசன் அவர்களிடம் எரிக் சுல்கைம் அவர்கள் முன்வைத்திருந்தார். இதே திட்டம் பின்னர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் உரையாடும் பொழுது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிளாட் அவர்களாலும் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தையே இம்முறை கே.பி – உருத்திரகுமாரன் தரப்பினரிடமும் ஹற்ரெம் அவர்கள் முன்வைத்தார்.

தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தவிர்ந்த ஏனைய போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டம்தான் அது. இத்திட்டம் பற்றி அப்பொழுது கே.பி – உருத்திரகுமாரன் தரப்பினரிடம் பின்வருமாறு ஹற்ரெம் தெரிவித்தார்:

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்கும். இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் மேற்கொள்ளும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை அமெரிக்க கடற்படையினர் பொறுப்பேற்கும் அதே சந்தர்ப்பத்தில் அனைத்துப் போராளிகளும் பிறிதொரு கப்பலில் ஏற்றப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு வைத்து முக்கிய போராளிகள் தவிர்ந்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். ஏனைய முக்கிய போராளிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வோருக்கான தண்டனையும், ஏனையோருக்கான புனர்வாழ்வும் அளிக்கப்படும்.

இச்சந்தர்ப்பத்தில் தலைவர் அவர்களோ அல்லது பொட்டு அம்மானோ கைதுசெய்யப்பட்டால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.’ இதுதான் கே.பி – உருத்திரகுமாரன் தரப்பினரிடம் ஹற்ரெம் அவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம். இதனை தலைவர் அவர்களும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி, தமிழீழ மக்களும் சரி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது கே.பி அவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்நிலையில் இதற்கு மேலதிகமாக இன்னொரு திட்டமும் கே.பியிடம் முன்வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தேச ஆயுதக் களைவும், சரணடைவும் இடம்பெறுவதற்கு முன்னர் வன்னியை விட்டு தலைவரும், பொட்டம்மானும் தப்பிச் செல்வதுதான் அந்தத் திட்டம். இத்திட்டத்திற்கு தலையசைத்த கே.பி, தான் வன்னிக்குச் சென்றால் ஒழிய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும், வன்னியை விட்டுத் தலைவரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் தற்காலிக மோதல் தவிர்ப்பு ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அத்தோடு ஐரோப்பிய நாடொன்றில் ‘அதிலும் நோர்வேயில்’ தலைவருக்கும், பொட்டம்மானுக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

எனினும் இதனை நிராகரித்த ஹற்ரெம், இந்தியாவை மீறி தலைவருக்கும், பொட்டம்மானுக்கு தம்மால் அரசியல் தஞ்சம் வழங்க முடியாது என்றும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுக்கும், சரணடைவுக்கும் தலைவரை இணங்க வைப்பதற்கான உத்தரவாதத்தை கே.பி வழங்கினால் அவரை கொழும்பு ஊடாக வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கும், வன்னியை விட்டுத் தலைவரும், பொட்டம்மானும் தப்பிச் செல்வதற்குத் தேவையான தற்காலிக மோதல் தவிர்ப்பை கொண்டு வருவதற்கும் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு குண்டையும் ஹற்ரெம் தூக்கிப் போட்டார். இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் தலைவரின் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதுதான் அது. மிகவும் ஆபத்தான – அதுவும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிரைப் பறிக்கக்கூடிய அபாயத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேரோடு துடைத்தெறியும் நோக்கத்தையும் கொண்ட இத்திட்டத்திற்கு எவ்வித தயக்கமும் இன்றி கே.பி தலையசைத்தார். இத்திட்டத்திற்கு தலையசைத்ததோடு மட்டும் கே.பி நிற்கவில்லை. இலங்கை கடல் எல்லை வரை தலைவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்தால் மலேசியா வரை தன்னால் தலைவரை அழைத்து வந்து அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று கே.பி கூறினார்.

இதனையடுத்து இதற்கான அதிகாரபூர்வ ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராயும் நிமித்தம் கே.பியை ஒஸ்லோவிற்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஹற்ரெம் அவர்கள் உறுதியளித்தார்.
இவ்வாறு கே.பியை ஒஸ்லோவிற்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளில் நோர்வே தரப்பினர் ஈடுபட்டிருந்த அதே
வேளை, இத்திட்டத்தின் எழுத்து வடிவம் கே.பி அவர்களால் – உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் ஆகியோ
ரின் ஆக்கத்தில் – நகல்படுத்தப்பட்டு வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை வன்னிக்கு அனுப்பி வைத்ததோடு மட்டும் கே.பி நின்றுவிடவில்லை. இன்னொரு காரியத்தையும் கே.பி செய்தார்.

அப்பொழுது தென்கிழக்காசிய நாடொன்றில் தங்கியிருந்த வான்புலிகளின் போராளி ஒருவருடன் தொடர்பு கொண்ட கே.பி, தலைவரை வன்னியிலிருந்து மீட்டு வருவதற்கு தனக்கு வானோடிகளை ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார். அடுத்தபடியாக ஒஸ்லோவில் தங்கியிருந்த அனைத்துலக தொடர்பகப் போராளி ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திய கே.பி, தலைவரை மீட்டு வருவதற்காக உலங்குவானூர்தி ஒன்றையும், கப்பல் ஒன்றையும் தான் கொள்வனவு செய்ய இருப்பதாகவும், வீ.மணிவண்ணனும் உரையாடி இதற்கான நிதியை தனக்கு விரைவாக ஏற்பாடு செய்து தருமாறும் அழுத்தம் கொடுக்கக் தொடங்கினார்.

ஆனால் கே.பியின் இத்திட்டம் தலைவர் அவர்களால் உடனடியாகவே நிராகரிக்கப்பட்டது. ‘மலேசியாவிலையும், தாய்லாந்திலையும் தான் ஒளிஞ்சு திரியிறது காணாது எண்டு இப்ப என்னையும் கே.பி துணைக்கு அழைக்கிறானோ?’ என்று தளபதி சூசையிடமும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடமும் சீறிப்பாய்ந்த தலைவர் அவர்கள், இவ்வாறான முட்டாள்தனமான திட்டங்களை முன்வைப்பதை விடுத்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கான பேச்சுக்களில் மட்டும் ஈடுபடுமாறும், அவ்வாறு அல்லாது விட்டால் பேசாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு கே.பியிடம் கூறுமாறும் பணித்தார். தலைவர் அவர்களின் கட்டளை உடனடியாகவே கே.பியிடம் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு கே.பி முன்வைத்த திட்டமும் பிசுபிசுத்துப் போனது.

இது இவ்விதமிருக்க தலைவரை மலேசியாவிற்கு அழைப்பதற்கான கே.பியின் திட்டம் இராசதந்திர வட்டாரங்களில் காட்டுத்தீ போல் பரவ, அது கொழும்பை சென்றடைவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. இதுபற்றி ஹற்ரோம் அவர்களை நேரடியாகவே அழைத்து மகிந்த ராஜபக்ச விளக்கம் கோரினார். அத்தோடு சிங்கள அதிகார வர்க்கம் நிற்கவில்லை. உடனடியாகவே இச்செய்தியை மலேசிய அரசாங்கத்திற்கு சிங்கள அதிகாரவர்க்கம் அறிவிக்க, ‘பிரபாகரன் மலேசியாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற அறிவித்தலை உடனடியாகவே மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டது. அத்தோடு இன்னொரு அறிவித்தலும் மலேசியக் காவல்துறையினரால் விடுக்கப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தந்தால் அவரைத் தாம் கைது செய்வோம் என்பதுதான் அந்த அறிவித்தல்.

கே.பியின் முட்டாள்தனமான திட்டத்தை தலைவர் நிராகரித்து ஓரிரு வாரங்கள் கடப்பதற்குள் தலைவரின் தீர்க்கதரிசனமான பார்வையை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வறிவித்தல்கள் அமைந்தன. ஆனால் இவையெல்லாம் தனது மனதில் தலைவர் பற்றிய மண்கோட்டை ஒன்றை கே.பி கட்டியெழுப்புவதற்கு காலாக அமைந்தன: வன்னியை விட்டு வெளிநாட்டிற்கு தலைவர் அவர்கள் தப்பிச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கைதான் அது. இறுதிப் போரில் வன்னியை விட்டுத் தலைவர் அவர்கள் தப்பிச் செல்லவில்லை என்று கே.பி நம்புவதற்கும், அதனை அடிப்படையாக வைத்து தலைவரின் இருப்பிற்கு முடிவு கட்டும் அறிவித்தலை 23.05.2009 அன்று கே.பி வெளியிடுவதற்கும், மலேசியாவிற்கு தலைவரை அழைப்பதற்கு தான் முன்வைத்த திட்டத்தை தலைவர் நிராகரித்தமை பெரும் வாய்ப்பாக அமைந்தது எனக்கூறின் மிகையில்லை.

எந்த முடிவை எடுத்தாலும் அதில் இரகசியம் காப்பவர் தலைவர். தனது பாதுகாப்பில் தனது மெய்ப்பாதுகாவலர்களைவிட அதிக அக்கறை செலுத்துபவர் தலைவர். 1970 ஆம் ஆண்டு மாணவர் பேரவையோடு இணைந்து செயற்பட்ட காலப்பகுதியாக இருந்தாலும் சரி, 1972ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கிய பொழுதும் சரி, அதன் பின்னர் 1976 அவ்வமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்சூட்டிய பின்னரும் சரி, எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பவர் தலைவர்.

வன்னியில் தலைவரின் கதை முடியப் போகின்றது என்று 2009 பெப்ரவரி மாதத்திலிருந்து கே.பி மனப்பால் குடித்துக் கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு என்ன முடிவை தலைவர் எடுத்தார் என்பது உண்மையில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடன் கூட இருந்த தளபதிகள் – பொறுப்பாளர்கள் கூட அதை அறிந்திருக்கவில்லை. ஏன் முள்ளிவாய்க்காலில் எங்கு தலைவர் நின்றார்? எப்பொழுது வரை நின்றார்? என்பதுகூட அங்கு நின்றவர்களுக்கே பெரும் புதிராக இருந்தது.

இவ்வாறு காலத்தை வென்ற ஒருவராகவும், எவராலும் புரிந்து கொள்ள முடியாதவராகவும் விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புப் பற்றி கே.பியிற்கு என்னதான் தெரிந்திருக்க முடியும்? எதுவுமே இல்லை. அப்படி
யானால் தலைவர் அவர்களின் இருப்பிற்கு முடிவுகட்டும் தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ? அல்லது முற்று முழுதான ஊகத்திற்கு ? கே.பி வருவதற்கு வேறு என்ன காரணங்கள் இருந்தன?

(முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும்)
நன்றி : ஈழமுரசு

Leave a Reply

Your email address will not be published.