வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட்சிப்பீடமேறும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் சட்டங்களை அமுல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். இந்த விடயத்தில் அரசுக்கு வடமாகாண சபை சிம்ம சொப்பனமாகத் திகழும். எனவே, வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவே கூடாது.”இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய இரு பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் நேற்று கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது ஜனாதிபதி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிக்கவேண்டும் என்றும், இதற்காக மக்களை அணிதிரட்டுவோம் என்றும் அந்தக் கட்சிகள் சூளுரைத்துள்ளன.
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் புலிகளுக்குப் பயந்து நீதிபதிகளை அச்சுறுத்தியே அன்று ஜே.ஆர். அமுல்படுத்தினார் என்றும் அந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொழும்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் நேற்று கூட்டாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தின.
அங்கு கருத்து வெளியிடும்போதே மேற்படி கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்ஸவும் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இங்கு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:
ஹெல உறுமயவும் தேசிய சுதந்திரமுன்னணியும் இணைந்து முதற்றடவையாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன. இவ்விடயத்திற்காக வெளிநாட்டு சக்திகளுக்கும் இந்தியாவுக்கும் அடிபணியாமல் தமிழர் விடுதலை முன்னணிக்கு எதிராகவும் இவ் விடயத்தில் மிக பலமாக நாங்கள் நிற்போம். அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கே முதலில் நாம் இணைந்துள்ளோம். இதன் பின்னர் நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள், பௌத்த தேரர்கள், புத்திஜீவிகள் எனப் பலர் இதற்கு எதிராக எங்களுடன் இணைந்துள்ளனர்.
இந்த நாட்டில் மாகாணசபை என்ற ஒரு சபை தேவையில்லை. அதனால் அரசின் பணம் வீண்விரயமாகின்றது. ஒரு நாடு ஒர் ஆட்சி என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஆட்சியமைய வேண்டும். இம் மாகாண சபையினால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டுவதில்லை. இதனால் மாகாண மத்திய அரசின் நிருவாகம் குழம்பிப்போயுள்ளது.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. இனி இச்சட்டம் தேவையில்லை.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலம் ஐனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இருக்கும் போது உடனடியாக 13ஆவது திருத்தத்தை அகற்றவேண்டும்.
1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ராஜீவ் காந்தி இணைந்து விடுதலைப்புலிகளின் ஆயுதத்திற்குப் பயந்து 5 நீதிபதிகளைப் பயமுறுத்தி இதனை அமுல்படுத்தினர். அன்று இதற்கு எதிராக செயற்பட்ட பிரதம நீதியரசர்களை ஜே.ஆர் நீக்கினார். அன்று இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பதவிவிலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கி வைத்திருந்தார்.
இச்சட்டம் நிறைவேறும்போது 150 பேருக்கும் மேற்பட்டவர்கள் சுடப்பட்டு அவர்களது சடலத்தைக்கூட கையளிக்கவில்லை என அமைச்சர் விமல் தெரிவித்தார். இந்த நாட்டில் டட்லி செல்வநாயகம், பண்டா செல்வா ஒப்பந்தம், அமிர்தலிங்கம் ஜே.ஆர். ஒப்பந்தமென எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அவை ஒன்றும் இந்த நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை. அதேபோன்றுதான் இந்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறியவேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க
வடக்கில் விடுதலைப் புலிகளுக்காகவே அவர்களது ஆயுதங்களைக் கீழே வைப்பதற்காகவே ஜே.ஆர். இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால், விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையளிக்கவில்லை. மாறாக, வெளிநாட்டுப்படை கொண்டுவரப்பட்டது. 66 ஆயிரம் பேர் இச் சட்டத்தின் பின் இறந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 29 ஆயிரம் சிங்கள மக்களும், 32ஆயிரம் முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டனர். வடக்கில் மாகாணசபை என்ற தேர்தல் நடைபெறக்கூடாது. அண்மையில் கொண்டுவரப்பட்ட “திவிநெகும’ சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது உயர்நீதிமன்றம் 9 மாகாண சபைகளிலும் இச்சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும், வடக்கில் மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சிக்கு வரும். இதன் பின்னர் இந்த நாட்டில் எந்தவொரு சட்டத்தையும் நாம் அமுல்படுத்த முடியாது.
அதற்கு வடக்கு மாகாணசபை தடையாக இருக்கும். வடக்கில் தமிழ்க் கூட்டமைப்பு பொலிஸ், காணி அதிகாரங்களையும் கொண்டுவந்து வடக்கு, கிழக்கை இணைத்து பெடரல் ஆட்சியைக் கொண்டுவந்துவிடும். அதன் பின்னர் இந்த நாட்டை ஒரு பிரிவினைவாததிற்கும் தனிஈழம் அமைப்பதற்கும் நாமே வழியமைத்துக் கொடுப்பது போன்றதாகும்.
அதற்காகவே இரு கட்சிகளும் இணைந்து இதனைத் தடுக்க முன்வந்துள்ளோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.