சிவனடியார் நவரத்தினம் மறக்க முடியாத கடலோடி..

சிவனடியார் நவரத்தினம் மறக்க முடியாத கடலோடி..

நேற்று முன் தினம் டென்மார்க்கிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வீட்டில் இல்லாத போதும் எனது மகளுடன் நீண்ட நேரம் பேசி நேதாஜிக் கழகத்தின் வரலாற்றை டென்மார்க்கில் பிறந்த எனது மகளுக்கு விலாவரியாக சொன்ன கட்டி இறந்துவிட்டாரா… அதிர்ச்சியில் எழுதுகிறேன்.

இன்று அதிகாலை வழமைபோல காலை நேரம் வல்வையில் என்ன நடந்ததென வல்வெட்டித்துறை. ஓ.ஆர்.ஜியை பார்த்தபோது இடி தாக்கியதைப் போல அதிர்ச்சியடைந்தேன், என் அன்புத்தம்பி கட்டி மின்சாரம் தாக்கி இறந்த செய்தியால்.

காட்டுவளவில் இன்று வாழும் இளையோரை பழைய நேதாஜிக்கழக தலைவராக இருந்த எனக்கு தெரியாது, நம்மைப் போன்றவருக்கும் இன்று நாமறியாத வல்வையின் இளையோருக்கும் இடையே நல்லதோர் தொடர்பாளராக இருந்தவர் கட்டி.

அன்று நாம் என்ன கனவு கண்டு நேதாஜி விளையாட்டுக்கழகத்தை ஆரம்பித்தோமோ அதே கனவுகளை நிறைவேற்றியவர் கட்டி..

2005ம் ஆண்டு நான் வல்வை வந்தபோது காட்டுவளவின் அத்தனை பகுதிகளையும் அழைத்துச் சென்று காட்டி அப்பகுதியை எப்படி முன்னேற்றுவதென நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவர்.

நேற்று முன்தினம் தொலைபேசியில் அவர் அதையே பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.. தனக்காக வாழாத சமுதாய சிற்பி எங்கள் கட்டி..

நேற்றுவரை தொடர்பில் இருந்த அவரின் இடத்தை நிரப்ப இனி யாருள்ளார் என்பது பலத்த கேள்வியாக மாறியுள்ளது.

சிறு பராயத்திலேயே என்னோடு ஓடி விளையாடிய நண்பன் கட்டி ஓர் அபார திறமைசாலி, அவனுடைய ஆற்றல்கள் வல்வை வரலாற்றில் தனியாக பதியப்பட வேண்டியவை.

அவைகளில் ஒன்று..

45 வருடங்களுக்கு முன் ஒரு நாள்.. வாடைக்காற்று வீசும்போது காட்டுவளவு கடற்கரையில் நின்று கொண்டிருந்தேன், கடல் அலை வேகமாக உருண்டு கொண்டிருந்தது.. வேக அலையில் கட்டுமரமொன்று உருண்டு வட்டிப்பாரில் சிக்குப்பட்டது.

அதற்கு அடுத்ததாக இன்னொரு கட்டுமரம் வந்தது, அதை இலாவகமாக சுழற்றி அலையில் ஏற்றி கச்சிதமாக உள்ளே செலுத்துகிறார் ஓர் இளைஞர்..

அப்போது எனக்கு அருகில் நின்ற மூத்த கடலோடி முதிரைக்கட்டையில் வாழ்ந்த வைத்தி அண்ணா, குட்டித்தம்பி அண்ணாவின் மாமனார் காலஞ்சென்ற நவரத்தினப்பா சொன்னார்…

இவன் யார் தெரியுமா..? நமது மூதாதையர் கடலோடியதால் உருவான பரம்பரை ஆற்றல் வரமாகக் கிடைத்த கடலோடி.. கடற் பிரிவு பார்த்து கட்டுமரத்தை இறக்கும் இவன் பெரியோன்.. இவனுக்கு இணையாக இன்று ஊறணி முதல் ஊரிக்காடுவரை ஓர் இளைஞனை காட்ட முடியாது என்று சொன்னார்.

இன்று அவனை பாய்மரக் கலைஞன் என்று எழுதியுள்ளார்கள், அதற்குக் காரணம் அன்று கண்ட ஆற்றல்தான்.

நீரோட்டம், சுழிகள், அலைகள், காற்றுப்போக்கு இவைகளை கருத்தில் கொண்டு இலாவகமாக படகோட்டுவதில் கட்டி அன்றே ஒரு சாதனையாளன்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் காட்டுவளவில் திருவிழா நடத்தி விளையாடுவது எமது பொழுது போக்கு அக்காலத்தே வல்வெட்டியில் மரங்களை வெட்டிவந்து கட்டி பூங்காவன திருவிழா சிறுவர் விளையாட்டாக நடக்கும்.

அப்போது குரங்காட்டம் பிரபலமாக ஆடுவோம், உடம்பை வளைத்து குட்டிக்கரணம் போட்டு, பம்பரம் போல சுற்றி விளையாடுவார் நமது நவரத்தினம், அதுதான் அக்காலத்தே நமது சாமி விளையாட்டு.

அந்த நினைவுகளோ என்னவோ எனது மகளிடம் பல விடயங்களையும் கூறியிருக்கிறார்…

இரண்டே நாளில் தனது வரலாற்றை அம்மனின் தீர்த்தோற்சவ நிகழ்வில் முடித்திருக்கிறார் கட்டி.

தனது வாழ் நாள் முழுவதையும் பொது வேலைக்கே அர்ப்பணித்த சமுதாய சிற்பி கட்டி.

ஒரு நாள் திடீரென போன் செய்து நேதாஜி விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்டத்தில் சாம்பியனாக வந்துவிட்டதாக சொன்னார்..

காட்டுவளவு வாசகசாலை நல்ல முறையில் அமைக்கப்பட்டதாக ஒரு நாள் சொன்னார்..

வல்வையை முன்னேற்றுவதற்கு இங்கிலாந்தில் இருந்து விருப்புக் கொண்டுள்ள அவருடைய நண்பர் சென்ற சில வாரங்களுக்கு முன்னர் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

வல்வை மக்களுக்காக இரண்டு வள்ளங்களை ஓட விட இருக்கிறேன்.. அதை கட்டியின் பொறுப்பில் கொடுக்க இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

திருவிழா முடிந்ததும் ஏரா ஓடலாம் என்று கட்டி கூறியதாகவும் சொல்லியிருந்தார்..

இன்று ஏரா ஓடுவது யார்..? வள்ளங்களை யார் கையில் ஒப்படைப்பது தடுமாற்றமாக இருக்கிறது..

கழகம், ஒழுங்கை, ஆலயம் என்பதற்கு அப்பால் ஒன்றுபட்ட உலக வல்வை என்ற சிந்தனையுள்ள என்னையும் ஓடியாடியாடிய ஒழுங்கையை ஒரு நாளும் மறக்கக் கூடாது என்று அடிக்கடி சிந்திக்க வைத்தவன் கட்டி..

மண்ணோடும் கடலோடும் வாழ்ந்த மகத்தான மனிதன் சிவனடியார் என்ற வல்வையின் புகழ் பெற்ற பட்டாசு வெடிக் கலைஞர் பெற்ற மகன் காட்டுவளவு கட்டி இன்று எம்மோடு இல்லை.

ஒருவர் இறந்துவிட்டால் அவரைப்பற்றி இரண்டு நாள் கழித்து எழுத முயல்வேன்.. ஆனால் செய்தி பார்த்த இக்கணமே ஒரு நொடி தாமதியாது நான் எழுதியது இவனுக்குத்தான்.

அன்றொரு நாள் சுமார் 37 வருடங்களின் முன்பாக..

கட்டியுடைய ஒன்றுவிட்ட அண்ணன் பிரபலமான கடலோடியாக இருந்தவன், நண்பன் காட்டுவளவு தேவராசா.

அன்றொரு நாள் இந்திய கரையோர காவலர்கள் துப்பாக்கி முனையில் மறித்தபோது சுட்டுப்பார் என்று கூறி படகை எடுத்து, மார்பிலே துப்பாக்கி வேட்டுக்களை சுமந்து கோடியாக்கரையில் விழுந்த வீரன்.

உயிருக்கு அஞ்சாத உன்னதக் கடலோடி..

அவனுடைய படகோட்டும் ஆற்றலுக்கு அன்றய வல்வையின் வியாபாரிகள் தலை சாய்ந்து மரியாதை கொடுத்தார்கள்.. தான் உழைத்ததை எல்லாம் அவர்களிடம் விட்டுவிட்டு உயிரைக் கொடுத்தான்.

கடலோடிக்கு உயிர் பெரிதல்ல என்ற உன்னத வரலாற்றை கடலில் இரத்தத்தால் எழுதினான்..தேவராஜா..

அன்று அந்த நண்பன் இறந்தபோது ஒரு அஞ்சலிக் கவிதையை அச்சடித்து வல்வை வீதிகளில் ஒட்டினோம்..

அப்போது எழுதியிருந்தேன்…

ஆலமரமாய் நீயிருந்தாய் நிழல் தர – கோல
நிழலில் நாமிருந்தோம் குளிர் பெற .. என்று அக்கவிதை போகும்…

இன்றும் அவன் தம்பியான நவரத்தினத்திற்கும் அதுதான் அஞ்சலிக்கவிதை..

அவனுக்கு பின் காட்டுவளவு மக்களையும், நேதாஜி கழகத்தையும் ஆலமரமாகத் தாங்கிய கடலோடி நமது கட்டி இன்று வல்வை மண்ணில் வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு அதே வரிகளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்…

புலம் பெயர்ந்து உலகின் எந்த மூலைக்கு போனாலும் வல்வை உறவுகள் ஒருவரை ஒருவர் மறப்பதில்லை என்பதும்.. இறப்பதற்கு முன் உணர்வு தட்ட இவ்வாறு தொடர்பு கொள்வதும் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது.

உணர்ச்சிகளுக்கு அப்பால் ஏதோ ஒரு சங்கிலி நம்மை பிணைத்துள்ளது, இதை இனியாவது வல்வை மக்கள் உணர வேண்டும் என்ற தகவல் இந்த இழப்பில் உள்ளது.

இந்த மர்மச்சங்கிலி விளக்க முடியாத அருவமானது..

இந்த உணர்வின் முன் வல்வையின் அத்தனை பிளவுகளும் மறைய வேண்டும்..

வல்வை மக்கள் ஒன்று பட்டு இந்த வீரனை வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கடல் கடந்து நின்று கேட்கிறேன்.

முத்துமாரி அம்மன் தன்னோடு அழைத்துச் செல்ல இவனை மட்டும் தெரிவு செய்தாளென்றால் அது எத்தனை பெரிய பாக்கியம்…

அவன் ஆத்ம சாந்திக்கு முத்துமாரி அம்மனை தொழுகிறேன்..

அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதலாக இருப்போம்..

வல்வை நேதாஜி கழக உறுப்பினருக்கும் எனது அனுதாபங்கள்..

கட்டி போகவில்லை அவன் காட்டுவளவு கடற்கரையில் வாழ்கிறான்.. ஊறணிக்கடற்கரையில் அவன் நீர் ஊற்றும் மரங்களில் நின்று சாமரம் வீசுகிறான்…

வீரர்களுக்கு மரணமில்லை..

கி.செல்லத்துரை டென்மார்க் 05.05.2015

Leave a Reply

Your email address will not be published.