வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் 40 ஆயிரம் வரையிலான கொல்லப்பட்டுள்ள பின்புலத்தில் இந்த உயிரிழப்புக்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறி விட்டது எனக்கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை ஒன்றை பி.பி.சி ஊடகம் பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி அறிக்கையின் தொகுப்பு இது:
பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமன்றி, பொதுமக்களின் உயிரிழப்பின் எண்ணிக்கையை சரியாக வெளியிடாமை, வன்னியில் இருந்த தனது பணியாளர்களை மீள அழைத்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது பற்றிக் குறிப்பிட்டுள்ள பி.பி.சியின் செய்தியாளர் 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிப்போரில், போரில் ஈடுபட்ட இரு தரப்பும் போர்க்குற்றம் புரிந்திருப்பதாகக் கூறுகின்றார். போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் காப்பாற்ற கொழும்பில் இருந்த ஐ.நா பணியாளர்கள் தவறி இருப்பதாகவும் இந்த வரைபு அறிக்கையில் இருப்பதாக இந்தச் செய்தியாளர் கூறுகின்றார்.
ஐக்கிய நாடுகள் விட்ட தவறு, மீண்டும் இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தும் இந்த உள்ளக வரைபு அறிக்கை, இறுதிப் போரின்போது ஐக்கிய நாடுகள் சபை ஒரேயொரு அறிக்கை மட்டுமே வெளியிட்டது எனவும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கைப் போர் பற்றியோ, பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுப்பது தொடர்பாகவோ எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டுமன்றி, தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளை மட்டும் மனித உரிமை மீறல் விடயத்தில், குற்றச்சாட்டிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை, சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்ப பற்றி வாய் திறக்கவில்லை என்று கண்டிக்கின்றது. இந்தச் செய்தியில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பது:
இறுதிப் போரின்போது வன்னியில் இருந்த ஐக்கிய நாடுகள் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இது பற்றி ஐ.நா இதுவரை சிறீலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவில்லை. இது ஐ.நா விதிமுறைகளுக்கு மாறானது. அது மட்டுமன்றி ஐ.நாவின் பொறுப்பு பற்றிய கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது. காணொளி இணைப்பு: