ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் சமர்பித்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவ்வறிக்கை எப்படியோ கசிந்துள்ளது. இரகசியமாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு மட்டும் கையளிக்கப்படவேண்டிய இவ்வறிக்கை எப்படிக் கசிந்தது என்பது ஒருபுறம் இருக்க அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள, பல செய்திகள் மேலும் அதிர்ச்சி தருகின்ற வகையில் அமைந்துள்ளது. வன்னியில் போர் நடைபெற்றவேளை, 3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் அப்பகுதியில் வசித்ததாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் முடிவடைந்த பின்னர் சுமார் 2 லட்சத்தி 80,000 ஆயிரம் பேர் மட்டுமே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் 80,000 பொதுமக்கள் எங்கே என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இறுதிப் போரில் 40,000 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சில அமைப்புகள் கூறிவரும் நிலையில், இத் தொகை இரட்டிப்பாகியுள்ளது. தற்போது கசிந்துள்ள 128 பக்கங்களைக் கொண்ட ஐ.நா வின் அறிக்கை முழுவதுமாக அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.