முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல! -சிறிதரன் MP

முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல! அது ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும். ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? என்பதில் இருந்து இங்கு அரசியல் தொடங்கப்படத் தேவையில்லை.

மாறாக தமிழ் மக்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகளை ஏற்றுக்கொள்வதிலிருந்தே அரசியல் தொடர்பு தொடங்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிறைவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டநிலையில் இன்று இது வானத்தில் துப்பிய எச்சிலாய் முகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சிறிதரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

வானத்தை நோக்கி துப்பினால் அது உன் முகத்தில் வந்து விழும் என்று புத்த பெருமான் கூறியிருக்கிறார். அந்தவகையில் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் இப்போது புத்த பெருமான் கூறியதைப் போன்றே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

தமிழரின் வியர்வையால் வளப்படுத்தப்பட்ட இலங்கை இன்று அதே தமிழரின் இரத்தத்தால் இலங்கைத் தீவு கறைபடிந்ததாகி விட்டது. தமிழ் மக்களுக்கான உரிமைகள் என்னவென்பதை அறிந்து அதனை ஏற்றுக்கொண்டு ஒரு வளமானதும் ஐக்கியமானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு சிங்களத் தலைவர்கள் தவறிவிட்டனர்.

தமிழரை எதிரிகளாகவும் அந்நியர்களாகவும் கருதும் ஒரு மனப்பாங்கு மகாவம்ச கலாசாரத்தில் இருந்து உருவானது. இந்த மகாவம்சக் அக்ருத்துக்களால் சிங்களத் தலைவர்களும் சிங்கள கனவான்களும் தமது கண்களை இறுக்கிக் கட்டிக் கொண்டுள்ளனர். 1983 யூலைக் கலவர தமிழின படுகொலை பற்றி இலங்கையின் தொல்பொருள் கழகத் தலைவராகவும் பாளி மொழி நிபுணருமான அமரர் டாக்டர் ஈ.டபிள்யூ அதிகாரம் பெருந்துயர் தோய்ந்த சம்பவங்கள் இனிமேலும் தொடராதிருக்க வேண்டுமெனில் மகாவம்சப் பிரதிகள் அனைத்தும் தீயிலிட்டு கொளுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கற்கால மகாவம்சம் மனப்பாங்குக்குப் பதிலாக நவீன சிந்தனை கொண்ட பல்லினங்களைத் தழுவி ஒரு பல்லின நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு சிங்களத் தலைமையும் முன்வரவில்லை. மாறாக தமிழரைக் கொன்று குவிப்பதையும் உரிமைகளை மறுப்பதையும் தமது தலையாயக் கடமையென பின்பற்றி வருகின்றன.

நவீன நிலைமைக்குப் பொருத்தமான ஐக்கிய இலங்கையை பல்லினத் தன்மையோடு அக்ட்டியெழுப்புவதற்கு தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்ற நிலையில், சிங்களத் தலைவர்கள் ஓர் இன மேலாதிக்கத்தை அரசியல் இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் தமிழ்த் தலைவர்களின் தலைகளைப் பிரித்து இரத்தத்தால் கொழும்புக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தொடக்கமானது கல்லோயாவில் தமிழ் விவசாயிகளின் இரத்ததை ஆறாய் ஓடச் செய்ததுடன் முள்ளிவாய்க்காலில் தமிழரின் இரத்தம் இந்து சமுத்திரத்தை சிவக்கச் செய்ய வழி வகுத்தது.

ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? என்பதில் இருந்து நாம் அரசியலை தொடங்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகளை ஏற்றுக்கொள்வதிலிருந்தே அரசியல் தொடங்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய மகிழ்ச்சியில் சிங்களத் தலைவர்கள் வெடிகொளுத்தி மகிழமுடியும். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் வெடிகுண்டுகளால் தகர்க்கப்படக் கூடியவை அல்ல. அரசாங்கம் கூறுவதைப் போல் பயங்கரவாதம் ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் ஏற்றுக்கொள்ளப்படாது ஒடுக்கப்படுகின்ற தமிழர் உரிமையே இங்கு பிரச்சினை ஆகும்.

முள்ளிவாய்க்கால் சம்பவ நிறைவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே அது இன்று வானத்தைப் பார்த்து துப்பிய எச்சில் முகத்தில் வீழ்ந்த வண்ணம் உள்ள கதையாக இருக்கின்றது.

படுகொலை செய்யப்பட்ட தமிழரைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. செயற்பட்டிருக்கவில்லை என்ற குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கின்றது.

ஐ.நா. அறிக்கையின்படி 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள அதேவேளை ஒரு இலட்சத்து 40ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கின்றார்.

எப்படியிருப்பினும் உண்மைத் தன்மையானது, தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட தமிழருக்காக துளியேனும் இரங்காத சிங்களவர்களுடன் எவ்வாறு ஐக்கியப்பட்டு வாழ முடியும்? என்பதை இன்று ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் உறவுகளை இழந்து எமது மக்கள் கண்ணீரில் கிடந்தபோது நீங்களே பட்டாசு கொளுத்தி கொண்டாடினீர்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆயுதங்களின் மேல் காதல் கொண்டவர்கள் அல்லர். மாறாக உரிமை மறுக்கப்பட்டதால் தவிர்க்கமுடியாத வெளிப்பாடே இது ஆகும் எனக் கூறி தன் கருத்தை முடித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.