வடக்கில் பெண்கள் இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதற்காக இந்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன், எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல் கிளிநொச்சியில் தமிழ் பெண்கள் இராணுவத்தில் உள்ளீர்க்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விடயங்கள் தொடர்பான அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போதே சிறிதரன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடரந்து உரையாற்றுகையில்,
கிளிநொச்சி பாரதிபுரத்திற்கு அண்மையில் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகளாக இருந்த பெண்கள் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சந்தித்து இராணுவத்தில் கணனி பயிற்சிகள், லிகிதர் வேலை வாய்ப்புகள் வழங்குவதாகவும் அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறி பெண்களை அழைத்துச் சென்று 103 தமிழ் பெண்களை இராணுவத்தில் உள்ளீர்த்துள்ளனர்.
இவ்வாறு பெண்களை நேரடியாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவதற்கு இப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என்றார்.