இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: நாம் தமிழர் கட்சி

மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.
தனது பிறந்தநாளுக்கு நமது தலைவர் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிக நாளாக, நம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், குடும்ப உறவுகளையும், மானுடம் எல்லாவற்றினும் பெரிதாகக் கருதும் உயிரையே ஆயுதமாக்கிய போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.
இனத்தின் விடுதலை என்பது மற்றுமொரு பிரச்சனையல்ல, அது அரசியலும் அல்ல, அது எம்மினத்தின் புனிதமான உரிமை. அதனை விட்டுத்தந்துவிட்டால், பிறது நமக்கென்று அரசியல் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவேதான் மாவீரர் தினத்தை கடைபிடிக்கும் நாம், அந்த நாளில், நமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்றிணைந்த திரட்சியே இனத்தின் விடுதலை வென்றெடுப்பதற்கான புரட்சியாகும் என்பதை தமிழர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.
நம் இனத்தை பூண்டோடு அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். போரின் கடைசி நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை. தமிழினத்திற்கு எதிரான அந்தப் போரில் போர்க் குற்றங்கள்தான் நடந்துள்ளது என்று கூறுகின்றனவே தவிர, உண்மையில் நடந்த இனப் படுகொலையை பேச மறுக்கின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்றும், அதில் எம்மினத்தின் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், அது திட்டமிட்ட இன அழித்தலே என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காகவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்













Leave a Reply