Search

தமிழினத்தின் ஒரே தலைவர் பிரபாகரன்தான்: சீமான்

தன் குடும்பத்தைக் காக்க இனத்தை பலிகொடுத்த தலைவர்கள் மத்தியில் தனது இனத்தின் விடுதலைக்காக போராடியது மட்டுமின்றி, அதற்காக தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் தியாகம் செய்த பிரபாகரனே தமிழினத்தின் ஒரே தலைவர் என்று செந்தமிழன் சீமான் கூறினார்.

 தமிழீழ தேசத்தின் தலைவரும், தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவும் திகழும் மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை திருப்பெரும்புதூரில் நாம் தமிழர் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்டக் கிளை, அவருடைய  பிறந்தநாள் கூட்டத்திற்கு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தது. காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் இராசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரபாகரன் தமிழினத்தின் விடுதலைக்கு ஆற்றிவரும் பங்கை எடுத்துரைத்து நீண்டதொரு உரையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். அவருடைய உரை வருமாறு:

 இனமே செத்தாலும் பரவாயில்லை, தன் குடும்பம் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிற தலைவர்கள் மத்தியில், தான் நேசித்த இனத்திற்காக தான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளையும் இழந்தாலும் இனம் வாழ வேண்டும் என்பதற்காக போராடிவருபவர் நம் தலைவர் பிரபாகரன். அதனால்தான் அவர் தமிழினத்தின் முகமாகவும், முகவரியாகவும் திகழ்கிறார். சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தில் இருந்து தன் இனத்தை காக்க, மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அந்தத் தலைவரை பயங்கரவாதி என்று கூறினார்கள். ஆனால் அவரைப் போன்றதொரு அன்புமிக்க, கருணைமிக்க ஒரு மனிதனை இந்த உலகில் காண முடியாது.

 பிரபாகரன் துவக்கியைத் தூக்கி களத்தில் நின்ற காலத்தில் தமிழினம் ஈழத்து மண்ணில் சுதந்திரமாக நின்றதா? இல்லையா? அதுதான் கேள்வி. ஆனால் இன்றைக்கு என்ன நிலை? மொத்த இனமும் தனது பாரம்பரிய பூமியிலேயே அகதியாக, அனாதையாக, அடிமையாக, வீடற்று, நிலமிழந்து அன்னாடிகளாக அலைகிறதே? அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள், அவரால் பாதுகாக்கப்பட்ட அந்த மக்களை ஏன் காப்பாற்ற முன்வரவில்லை? நமது எதிரி சிங்கள மக்களோ அல்லது சிங்கள தேசமோ அல்ல, மாறாக, சிங்கள அரசுதான், அதன் முப்படைகளும்தான் என்பதை உணர்த்தி, படைகளுக்கு எதிராகத்தான் போர் புரிந்தார் பிரபாகரன். அதனால்தான் கட்டுநாயாக விமான நிலையத்தின் மீதும், அதன் பிறகு அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது நடத்திய மாபெரும் தாக்குதலில் கூட ஒரு அப்பாவி சிங்களன் கூட சாகாமல் பார்த்துக்கொண்டார்.

 இதே நேரத்தில் சிங்கள படைகள் என்ன செய்தன? தாய், தந்தையரை இழந்து நின்ற அனாதை தமிழ் பிள்ளைகள் வளர்க்கப்பட்ட செஞ்சோலையின் மீது போர் விமானங்களைக் கொண்டு குண்டு வீசி, 54 இளம் சிறார்களைக் கொன்றது சிங்கள படை. ஆனால் இந்த கொடுஞ்செயலை பயங்கரவாத நடவடிக்கை என்று ஒரு அரசும் கண்டிக்கவில்லை. மாறாக, நம்மை பார்த்து பயங்கரவாதி என்கிறது. ஏன் அப்படி கூறியது என்றால் பிரபாகரன் தன் மக்களை நேசித்த தேசியவாதியாக இருந்ததாலும், அவர்களின் விடுதலையை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மறுத்தாலும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது. பிரபாகரனை போல தன் மண்ணையும், மக்களையும் நேசித்த தலைவர் ஒருவருமில்லை.

 நம் இனத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு நடத்திய போரில் அதற்கு எல்லாவிதத்திலும் துணை நின்ற தெற்காசிய வல்லாதிக்கமான சீனாவும், உலக வல்லரசுகளும் முதலில் உதவ முன்வந்தது விடுதலைப் புலிகளுக்குத்தான். ஆனால், தனது மக்களின் விடுதலைப் போராட்டத்தை வல்லாதிக்கங்களின் துணையோடு முன்னெடுக்க பிரபாகரன் மறுத்தார். தனது மண்ணில் வெரொரு சக்தி கால் பதிப்பதை அனுமதிக்க மறுத்தார். சீன நாட்டின் உதவியை பெற்றுக்கொண்டு விடுதலை போராட்டத்தை நடத்தலாமே என்று கருத்து கூட எழுந்தது. சீனாவின் உதவியை நாடினால் அது தான் நேசிக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானதாக ஆகிவிடும் என்பதற்காக அதனை ஏற்காதவர் தலைவர் பிரபாகரன்.

 நம் தலைவரை போல இந்திய நாட்டை நேசித்த தலைவர் ஒருவருமில்லை. இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசையே தனது வழிகாட்டிய ஏற்றார், மாவீரன் பகத் சிங்கை முன்னுதாரணமாக போற்றினார் நம் தலைவர் பிரபாகரன். ஆனால் இந்தியா என்ன செய்தது? உலகில் எந்த ஒரு இனம் விடுதலைக்காக போராடினாலும், அதனை நோக்கி எமது உதவிக்கரம் நீளும் என்றார் இந்த நாட்டின் முதல் பிரதமர் பெருமகனார் நேரு. ஆனால் இந்திய மத்திய அரசு, நமது விடுதலைக்கு மட்டும் உதவிட மறுத்தது. மறுத்ததோடு மட்டுமின்றி, நம் விடுதலையை அழிக்க முற்பட்ட சிங்கள தேசத்துடன் கைகோர்த்து நின்று தமிழினத்தையே அழித்தொழிக்க துணை போனது.

 எனது தலைவனுக்கு ஒரு கனவு இருந்தது, அது இனத்தின் விடுதலை. நமக்கென்று ஒரு வரலாறு இல்லையடா தம்பி. விடுதலைப் பெற்ற ஒரு இனமாக தமிழினம் இல்லாது இருந்தாலும், அதற்காக போராடி செத்தார்கள் என்ற வரலாறாவது இருக்கட்டுமே என்று என்னிடம் கூறிய தலைவன் பிரபாகரன். அவன் தன் மண்ணிற்காகவும், தான் நேசித்த மக்களின் மானம் காக்கவும் போராடிய மாபெரும் தலைவன்

இவ்வாறு சீமான் பேசினார். இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் சந்திரசேகரன், தமிழன் தொலைக்காட்சி அதிபர் கலைக்கோட்டு உதயம், பன்னாட்டுத் தொடர்பாளர் கா. அய்யநாதன், புலவர் மறத்தமிழ் வேந்தன், அன்பு தென்னரசன், அமுதா நம்பி, ஆவல் கணேசன் ஆகியோரும் பேசினர்.

 பேராசிரியர் தஞ்சை இறையரசன் எழுதிய செம்மொழியும் சிவந்த ஈழமும்’ என்ற புத்தகத்தை சீமான் வெளியிட, அதனை கலைக்கோடு உதயம் பெற்றுக்கொண்டார்.

 சி. தங்கராசு
தலைமை நிலைய செயலர்
நாம் தமிழர் கட்சிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *