யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் நள்ளிரவில் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் நள்ளிரவில் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் ‘ தெரிவித்தார். இதுவரையில் நான்கு மாணவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
‘நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு ‘வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்’ என்று கூறினார்.
ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். ஆனால் அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர்.
அவரை கைது செய்ததற்கான எந்தவிதமான ஆவணங்களையும் எமக்குப் பொலிஸார் வழங்கவில்லை.” என்று கண்ணீருடன் தர்ஷானந்தின் தாயார் தெரிவித்தார்.
எனினும் இதுகுறித்து உறுதிப்படுத்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, ‘தமிழ், ஆங்கிலம் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் இல்லை. நாளை காலை நேரில் வாருங்கள்” என்ற பதிலே அரைகுறைத் தமிழில் கிடைத்தது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேரா சிரியர் வேல்நம்பி தெரிவித்தார்.
‘கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
‘இதன் பிரகாரம் இரண்டு மாணவர்களையும் நான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்” என்று தெரிவித்த அவர், விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என பொலிஸார் கூறினர் என்றும் மாணவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான க.ஜெனமேனன், விஞ்ஞானபீட மாணவனான எஸ்.சொலமன் ஆகிய இருவருமே கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
திருநெல்வேலிப் பகுதியில் நேற்றுமுன்தினம் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புதனன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் நடத்திய தடியடியில் சிக்கி எஸ்.சொலமன் அடிவாங்கும் படங்கள் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகி இருந்தன. பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியமைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று மாணவர்கள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த மேமாதம் தர்சானந்மீது இனந்தெரியா மர்மநபர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.