Search

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தமைக்காக பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரும்,  படையினரும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதில் “மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”, “கைது செய்த மாணவர்களை விடுதலை செய்“, “சர்வதேசமே இனினும் மௌனம் காக்காதே” என்பன போன்ற பலத்த கோசங்களுடன் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

மேலும் இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முண்ணனி, ஜனநாயக சோசலிச கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

இதேவேளை, யுத்தத்தின் பின்னர் முதன் முறையாக யாழ்.நகரில் மிகவும் எழுச்சி பூர்வமாகவும் அதிகளவு மக்கள் பங்களிப்புடனும் இந்தப்போராட்டம் ஒரு மாற்றத்திற்கான தொடக்கமாக இடம் பெற்றிருந்தது.

இந்த போராட்டத்தை முன்னிட்டு யாழ். நகரில் பெருமளவு பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டு அச்சுறுத்தல் மிகுந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தபோதும் அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தப்போராட்டத்தின் நிறைவில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தமிழ் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைக்கு எதிராக ஒரு போராட்ட இயக்கத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளனர்.

இந்த குழு அங்குரார்ப்பணம் இன்னும் சற்று நேரத்தில் யாழில் இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *