வல்வெட்டித்துறையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் குற்றப்புலனாய்வு பிரிவின் பிடியில்:-

வல்வெட்டித்துறையில்  கடத்தப்பட்ட பாடசாலை மாணவனது நிலை தொடர்பாக அவரது தொலைபேசி மூலமாக குடும்பத்தவர்களுக்கு தகவல் வழங்கும் ஏற்பாட்டை படைத்தரப்பு செய்துள்ளது. நேற்றைய தினம் படைப்புலனாய்வாளர்களால் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் கைவிடப்பட்டிருந்த அவரது கை தொலைபேசிக்கு தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் வந்தவண்ணமிருந்துள்ளது. இதையடுத்து அவரது சகோதரி கை தொலைபேசி குறுந்தகவல்களை பார்வையிட்ட வேளையிலேயே அம்மானவன் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

வல்வெட்டித்துறை ஊறணி பகுதியைச் சேர்ந்த அருளம்பலம் டிசோக்ராஜ் என்ற 19 வயது பாடசாலை மாணவரே நேற்றைய தினம் குடி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும் அவர் மாலை வரையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் குறித்த மாணவரைத் தேடிய வீட்டார் இன்று காலை வல்வெட்டித்துறைப் பொலிஸிலும், யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடடினை செய்திருந்தனர்.

இந்நிலையில் குறுந்தகவல் மூலம் கைது பற்றி பயங்கரவாத தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால்  தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே வல்வெட்டித்துறைப் பகுதியினை சேர்ந்த முன்னாள் போராளியான பிரசாத் என்பவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.