யாழ்.பல்கலை மாணவர்களில் மேலும் 10பேரை உடனடியாக ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு உத்தரவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் மேலும் பத்துப்பேரினை உடனடியாக ஒப்படைக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் தலைமை துணைவேந்தருக்கு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரினில் மூவர் தொடர்ந்தும் வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் வசம் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பத்துப்பேரது பெயர்ப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓப்படைக்கப்பட்ட பெயர் பட்டியலின் பிரகாரம் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் ஒவ்வொரு பீடங்களினதும் தலைவர்களுடன் மருத்துவ பீடத்தை சேர்ந்த ஜவரது பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.

எனினும் பெரும்பாலான மாணவ தலைவர்கள் சரண் அடைவது பற்றிய பேச்சிற்கே இடமில்லையென தெரிவித்துள்ளனர். தமக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிக்க வைக்கும் சதி முயற்சிகள் இருக்கக்கூடாதென மாணவர்கள் தரப்பினில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவ பீடமாணவர்களை கோப்பாய் பொலிஸிடம் ஒப்படைக்க மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் வைத்தியர்களான ரவிராஜ் மற்றும் முகுந்தன் ஆகியோர் முன்வந்து அழைத்து சென்றுள்ளனர்.

எனினும் மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் பகிஸ்கரிப்பு போராட்டங்களை கைவிடுமாறு அவர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக மாணவ ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் மருத்துவ பீட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தே வருகின்றனர். இந்நிலையில் தெற்கிலிருந்து வருகை தந்து கற்கைகளினில் ஈடுபட்டு வரும் மருத்துவ பீட சிங்கள மாணவர்களை வைத்து போராட்ட முடிவு பற்றி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.