தமிழ் மாணவர்களுக்கு எதிரான இலங்கையர்களின் பயங்கரவாத பிரச்சாரம் மேலும் வலுவடைந்துவருகிறது. மூன்று மாணவர்கள் காவலில் இருக்க மேலும் பத்து மாணவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறை அதிகாரப்பூர்வ ஆணையிட்டுள்ளது.
எதிர்ப்பு போராட்ட குற்றச்சாட்டுடன் தேடப்படும் மாணவ பட்டியலில் மாணவர் சங்க தலைவர், எல்லா கல்விப்பிரிவின் தலைவர்கள் மற்றும் மருத்துவப்பிரிவைச் சார்ந்த ஐந்து மாணவர்களும் அடங்குவர்.
இதற்கிடையில், இலங்கை இராணுவத்தினரின் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பயந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு முனைவருடன் சில விரிவுரையாளர்களும் இணைந்து மருத்துவ பிரிவை சார்ந்த ஐந்து மாணவர்களை இலங்கை காவல் துறையிடம் ஒப்படைக்க முயற்சித்துள்ளனர்.
இன்னிலையில், மாணவர்களின் எதிர்ப்பு போராட்டத்தை ரத்துசெய்யும்படியும் தொடர் போராட்ட முயற்சியினை கைவிடும்படியும் மருத்துவ துறையில் பயிலும் சிங்கள மாணவர்கள் மூலம் அத்துறைக்கு கொழும்பு முகவர்கள் தொடர்ந்து வற்புறுத்தல்களை கொடுத்துவருகின்றனர். அதற்கிணங்க, மருத்துவபிரிவு முனைவரும் மேலும் இரண்டு விரிவுரையாளர்களும் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி மாணவர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக யாழ்பாண செய்தி மூலங்கள் தெரிவித்துள்ளன.
வட மாகாண அனைத்து மாவட்டங்களிலும் தேடியும் இராணுவர்களின் பிடியில் சிக்காத மாணவ ஆர்வலர்களை சிறைபிடிக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இலங்கை காவல் துறை ‘பயங்கரவாத பிரிவு’ என்பதனை தொடங்கியுள்ளது. எவருக்கும் தீங்கிழைக்காமல் ஜனநாயக போராட்டம் நடத்திய மாணவ ஆர்வலர்கள், இலங்கை இராணுவத்தினரும் காவல் துறையினரும் அவர்களின் மீது சுமத்தியிருக்கும் ‘பயங்கரவாத’ குற்றச்சாட்டிற்கு எதிராக உத்தரவாதம் வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை இளம் மாணவர்கள் ‘பயங்கரவாதம்’ குற்றச்சாட்டின்கீழ் கைதானால் காலவரையின்றி தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு இளம் தமிழ் மாணவ சந்ததியினருக்கே பேர் அச்சுறுத்தலாகிவிடும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
இனப்படுகொலை அரசின் ஒட்டுமொத்த தீய செயல்களும் தளிர்விட்டிருப்பது இன்னமும் நீதிக்கான ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ‘பயங்கரவாத’ அடிப்படையில் கட்டுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் இந்தியாவின் கொள்கைகளுமே காரணமென அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்.
வெற்றிக்குமரன் தமிழரசி