கிளிநொச்சிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட ஜக்கிய நாட்டுகளுக்கான சில நாடுகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விடுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
கிளிநொச்சி யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இருந்து சென்றிருந்த பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் பெண்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டதோடு பெண்களின் பாதுகாப்பு பொருளாதார மேம்பாடு தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பற்றியும் கருத்துக்கள் கூறப்பட்டது.
மேலும் பொலீஸ் நிலையங்களில் பெண்கள் பிரிவு விரிவாக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தெரிந்த பொலீஸ் அதிகாரிகள் குறிப்பாக பெண் பொலீஸ் அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களில் நியமிக்கப்படவேண்டும் எனவும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தவிர கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சி சென்றிருந்த பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டனர்.
இதன்போது போது விளக்கமளித்த போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தர்மதாச இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் இன்னமும் முழுமையான முற்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக ஜநா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் ஜநாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோகண்ணவுடன் யப்பான்,தென் ஆபிரிக்கா, இத்தாலி, பிறேசில், நைஜீரியா, பங்காளதேஸ், றோமானியா, மற்றும் கொலம்பிய பல்கலைகழகத்தை சேர்ந்த இருவரும் சென்றிருந்தனர்