கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு” என்ற ஓர் அணியின் கீழ் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு” ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இக் கூட்டமைப்பில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வண.பிதா சக்திவேல், சி.பாஸ்கரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இது குறித்து கஜேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தினுடைய மூளை. அந்தவகையில் அரசாங்கம் ஒரு இனத்தின் மீது கைவைத்து அந்த இனத்தின் எதிர்காலத்தை அழிக்க முற்படுகின்றது என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள் வெளிப்படுத்துகின்றன. இதுவே அரசாங்கத்தின் நோக்கமுமாகும்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 10 மாணவர்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்றை பொலிசார் ஒப்படைத்துள்ளனர். இதில் 5 பேர் மருத்துவ பீட மாணவர்கள் என்பதோடு இப்பட்டியலில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் யூனியன் தலைவர்களின் பெயர்கள் உள்ளடங்குகின்றன. ஆனால் அவை உத்தியோகபூர்வமான பத்திரத்தில் வழங்கப்படவில்லை. காரணம் எதிர்காலத்தில் வரவுள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.
எனவே இக்கூட்டமைப்பானது அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கெதிராக போராடவே உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தாக்குதல் மற்றும் ஏனைய தமிழ் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாகவும் எமது போராட்டம் தொடரும்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு எதிர்வரும் 10 ம் திகதி கிளிநொச்சியிலும் 14ம் திகதி வவுனியாவிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை நாட்டை விட்டு விரட்டும் செயலில் அரசாங்கம்!- சுரேஷ் எம்.பி.
வடக்கில் தற்போது சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் ஒரு பதற்றமான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இளைஞர்கள் எவ்வித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை வடக்கில் தொடர்ந்தேர்ச்சையாக இடம்பெற்று வருகின்றது.
இதனால் இளைஞர்களை தமது பெற்றோர் வீடுகளில் வைத்திருப்பதற்கு கூட அச்ச நிலையில் உள்ளனர். இதனால் தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
யுத்தம் நிறைவடைந்தும் இன்னமும் குறைந்தளவிளான ஜனநாயக உரிமைகளை கூட அரசாங்கம் தர மறுத்துள்ளது. வடக்கில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்காதுவிடின் நாம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் போராட்டங்ளை முன்னெடுப்போமெனத் தெரிவித்தார்.
அன்னியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய காலத்திலிருந்தே தமிழ்த் தேசத்தை அரசாங்கம் அழிக்கத் தொடங்கவிட்டது
தமிழ்த் தேசத்தை இல்லாதொழிக்கும் செயற்முறையை, அன்னியர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த 30 வருடங்கள் இதனை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
யுத்தம் முடிந்துவிட்டதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்தாகவும், அரசாங்கமே கூறி விட்ட நிலையிலும் தமிழ்த் தேசத்தை இல்லாதொழிக்கும் செயன்முறையை முன்னெடுக்கவே அரசாங்கம் தொடர்ந்தும் முனைந்து வருகின்றமைக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இன்று யாழில் இடம்பெறும் கைதுகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், கைதுகள், விசாரணைக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு மக்கள் சூரியபுரத்தில் கட்டாயப்படுத்தி குடியேற்றப்பட்டபோது அங்கிருந்த ஒரு தாய் கூறியிருந்தார் “நாங்கள் முள்ளிவாய்காலிலேயே இறந்திருக்கலாம். ஏன் உயிருடன் வந்தோம் என்று கவலைப்படுகின்றோம்” என்று, இதையே அரசாங்கம் விரும்புகின்றது.
அதாவது மக்கள் எப்போதும் ஏக்கத்துடனும், அச்சத்துடனுமே வாழவேண்டும். அப்போதே தமிழ்த் தேசத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயன்முறைக்கு மக்கள் எதிர்ப்பு காண்பிக்கமாட்டார்கள். இன்று பல்கலைக்கழக மாணவர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
இது நாம் மேலே குறிப்பிட்டதைப்போன்று தமிழ்த் தேசத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளும் செயன்முறையின் ஒரு பாகம். இது இன்னும் பூதாகரமானதாக பல கோணங்களிலிருந்து வரவே போகின்றது. எந்தவிதமான காரணமும் இல்லாமலிருந்த அரசாங்கம் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைத்தையும், நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
புலிகள் இயக்கத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் விலகி சமூக வாழ்வில் இணைந்திருந்த ஒருவர் கூட தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார். எனவே நாம் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமான தீர்வு, நாங்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை காண்பிப்பது ஒன்றே. நாம் குற்றம் செய்யாதவர்கள். இங்கே பயப்படவேண்டிய தேவையும், ஒதுங்கிக் கொள்ளவேண்டிய தேவையும் அறவே கிடையாது. அப்படி நாம் ஒதுங்கிக் கொண்டால் இப்போதுள்ள பிரச்சினை தொடரும், இப்போதுள்ளதை விட அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றார்.