13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தத் தீர்மானித்துள்ளன. எட்டு கட்சிகள் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளன.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வது தொடர்பில் இந்தக் கட்சிகள் கவனம் செலுத்தும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சிகள் ஏற்கவே 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டி.பி., இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்வதனை தடுக்க முயற்சி எடுத்து வருகின்றன.