சர்வதேசத்தின் தலைசிறந்த இராஜதந்திரியின் நினைவுகளின் பதிவுகள் இன்று!
தமிழீழ தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பாலா அண்ணன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
விடுதலைப்போராட்டம் என்ற தியாக தீயை சுமந்திருந்த தமிழீழ தேசிய தலைவருக்கு பக்க துணையாக, அரசியல் ஆலோசகராக, சர்வதேச பேச்சு மேடைகளில் தலைமை தளபதியாக, தமிழீழத்தின் இராஜதந்திரியாக, தமிழீழ மக்களின் ஆத்மாக்களில் குடிகொண்டிருந்த பாலா அண்ணன் என்ற பெருவிருட்சம், எங்கள் தமிழீழ தேசத்தின் குரல் ஓய்ந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அவர் விட்டு சென்ற பணிகளும், நடந்து சென்ற பாதைகளும் இன்னும் வெறுமையோடு ஏங்கிக்கிடக்கின்றன.
ஈழதேசத்தின் விடுதலைப்போராட்டத்தின் வரலாறு எழுதப்படும் போது பாலா அண்ணன் என்ற தமிழீழ இராஜதந்திரி போர் காலத்திலும், சமாதான காலத்திலும் சங்கரமாய் இறுதிவரை சுழன்ற வரலாற்று வகிபாகத்தை மறந்து விட முடியாது.
பாலா அண்ணன் வாழ்ந்த 68ஆண்டுகளில் இறுதி 27ஆண்டுகள் தமிழீழ தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தலைவரோடு பயணித்திருக்கிறார்.
1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடமராட்சி கரவெட்டி மண்ணில் பிறந்த பாலா அண்ணன் 17வயதில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தியாளனாக தன் பணியை ஆரம்பித்தார். செய்தியாளனுக்கே உரித்தான ஓர்மம் இறுமாப்பு அச்சாமை, இயல்பாகவே பாலா அண்ணனிடம் இருந்ததாலோ என்னவோ அவர் அந்த பணியை தேர்ந்தெடுத்தார்.
பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்பாளராக பணியாற்றிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரித்தானியாவில் குடியேறி அங்கு குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.
மாக்சீசவாதியான அன்ரன் பாலசிங்கம் 1978ஆம் ஆண்டு காலகட்டத்தில் லண்டனில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.
இதன் விளைவாக விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்திற்காக அரச பயங்கரவாதமும் ஆயுதப்புரட்சியும், சோசலிச தத்துவமும் கெரில்லா யுத்தமும், சோசலிச தமிழீழம் நோக்கி, தமிழர் தேசிய இனப்பிரச்சினை, ஆகிய நூல்களை எழுதினார்.
1979ல் சென்னையில் முதன் முதலாக தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்தது முதல் அவர் நிரந்தரமாய் கண்மூடும் வரை தமிழீழ தேசத்திற்காய் 27 ஆண்டுகள் ஓயாது உழைத்தார்.
திம்பு பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் தரப்பு குழுவுக்கு ஆலோசகராக இருந்தது முதல் இந்திய அரசு, பிரேமதாஸ அரசு, சந்திரிக்கா அரசு, ரணில் விக்கிரமசிங்க அரசு, அதன் பின்னர் மகிந்த அரசு என பல்வேறு கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு விடுதலைப்புலிகளின் பேச்சுக்குழுவுக்கு தலைமை தாங்கி சென்றார்.
பகை உறுமும் போது அவர் தனக்கே உரித்தான உரத்தகுரலில் பேசி தமிழினத்தின் சமபலத்தை நிலை நிறுத்தி நின்ற வரலாறுகள் பல உண்டு.
அந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாம் எதிரிக்கு சிம்மசொப்பமாக திகழ்ந்தார். அந்த வேளையில் புலிகளுக்குள் ஒரு சிங்கம் என ஒரு பத்திரிகை அன்ரன் பாலசிங்கம் அவர்களை வர்ணித்திருந்தது.
2002ல் சமாதான ஒப்பந்தம் கைச்சத்திட்ட பின்னர் வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உலகமே வட்டக்கச்சி என்ற குக்கிராமத்தில் குவிந்திருந்த வேளையில் ஊடகர்களின் கேள்விக்கணைகளுக்கு அவர் அளித்த கம்பீரமான பதில்கள் சர்வதேசத்தில் ஒரு தலைசிறந்த இராஜதந்திரி என்பதை நிரூபித்து நின்றன.
மாவீரர் நாளில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் உரையை அடுத்து லண்டனில் இடம்பெறும் பாலா அண்ணனின் கொள்கை விளக்க உரைக்காக எக்சல் மண்டபம் மக்களால் நிறைந்து வழியும். கம்பிரமாக, நகைச்சுவையாக தலைவரின் உரைக்கு கொள்கை விளக்கம் அளிக்கும் பாலா அண்ணனின் குரல் ஓய்ந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன.
உலகம் எங்கும் ஏற்றுக்கொண்ட எங்கள் இராஜதந்திரி
உலகம் எங்கும் தமிழர்களின் உரிமை சொந்த மந்திரி
தாய்நிலத்தை தோளில் தாங்கி நின்று நீ சிரித்தாய்
தம்பியோடு சேர்ந்திருந்து நீ கரைந்தாய் என பாடிச்சென்றான் எங்கள் ஆஸ்தான கவிஞன்.
மூன்று பத்து ஆண்டுகளாய் விடுதலைக்காய் உழைத்த பாலா அண்ணனின் குரல் ஓய்ந்து போன போதும் அவர் ஈழமக்களின் மனங்களில் பெருவிருட்சமாக என்றும் வாழ்வார்.