இலங்கையில் நடந்த இறுதிப் போரின் பின்னர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பி.பி.ஸியின் முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிஸன் தெரிவித்துள்ளார்.
இப்படிக் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். போரின் போது காணாமல்போனவர்கள் குறித்த தனது புள்ளிவிவரங்களுக்கு ஆதாரமாக உலக வங்கி வெளியிட்டுள்ள இலங்கையின் சனத்தொகை தொடர்பான அறிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
பிரான்ஸிஸ் ஹரிஸன், இலங்கையில் பி.பி.ஸியின் செய்தியாளராக 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருந்தார். ‘இன்னும் எண்ணப்பட்டு வரும் சாவுகள்’ என்ற புத்தகத்தை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
போரின் போதும் போரின் பின்னரும் தமிழ் மக்கள் படும் துன்பங்களை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்வதாக அந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் தமிழ் மொழிபெயர்ப்ப்பான “ஈழம் சாட்சியம் அற்ற போரின் சாட்சியங்கள்” என்ற நூலின் வெளியீடு இன்று சென்னையில் (டிசம்பர் 15, சனி மாலை 6 மணி , புக் பாயிண்ட் அரங்கு , அண்ணா சாலை( ஸ்பென்சர் பிளாசா எதிர்புறம்), இடம்பெற உள்ளது. அதன் வெளியீட்டுக்காக சென்னை சென்ற ஹரிஸன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
‘தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் நாட்டைவிட்டுத் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை காணாமல்போனவர்களின் எண்ணிக்கையில் உள்ளடங்கி இருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உலக வங்கியின் சனத்தொகை அறிக்கையின்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் போரின் பின்னர் 1.06 லட்சம் பேர் காணாமல்போயுள்ளனர் என ஹரிஸன் கூறியுள்ளார்.
போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல்போனார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.