இமாச்சல பிரதேசத்தில் இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி.

சிறிலங்கா,இந்திய இராணுவத்தின் சிறப்புப் படையணிகள் இணைந்து இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

உணர்வுபூர்வமான விடயம் என்பதால், இதுபற்றிய தகவல்களை இரகசியமாகப் பேணிக் கொள்வதென இருநாட்டு அரசாங்கங்களும் முடிவு செய்திருந்ததாக, இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 3ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்த 21 நாள் போர்ப்பயிற்சி, வரும் 24ம் நாள் நிறைவடையவுள்ளது.

கடந்த இரண்டு பத்தாண்டு காலத்தில், கிளர்ச்சி முறியடிப்பில் தமது அனுபவங்களை இருநாட்டு சிறப்புப் படையினரும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, இந்தப் போர்ப்பயிற்சி இந்தியாவின் தென்பகுதியிலேயே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, இமாசல பிரதேசத்துக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இந்தியாவில் கடந்த ஆண்டு 820 சிறிலங்கா படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் 870 சிறிலங்காப் படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.