கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்றுக்காலை வருகைதந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் கழிவுகளை அகற்றிவிட்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது.
இவ் உண்ணவிரதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம் மாலை 4.00 மணிவரை நடைபெறும் என தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்துள்ள தந்நை செல்வா நினைவு சதுக்கத்தில்; நாளை காலை 7மணிமுதல் மாலை 4.30 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதும், அப்பாவி பொதுமக்களினதும் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் வலியுறுத்தவுள்ளோம் என்றார். அவர் மேலும் தமிழர் தாயகத்தில் இராணுவப்பிரசன்னம் நீக்கப்பட வேண்டுமென்றும் இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களின் அபிலாசையினையும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் உறுதிபடத் தெரிவிக்கவிருக்கின்றோம்.
இதேவேளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றனர். இதேபோல் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் உட்பட பலதரப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.