இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பிரதேச மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச் சென்றதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார்.
மக்கள் தமது காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துச் சென்றதாகவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தலைவி தெரிவித்தார்.
தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்ட போது அவர்களை விடுவிப்பதற்காக தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.
2008 முதல் 2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு காணமல் போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில் அங்கம் வகிப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவி சுட்டிக்காட்டினார்.