மூன்று முக்கிய புலி உறுப்பினர்களை கைது செய்வதற்காக இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசேட தேடுதல்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் நோக்கில் தமிழகத்தை மையமாக கொண்டு செயற்படும் புலிகளுக்கு ஆதரவான அமைப்பு ஒன்றின் மூன்று முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்வதற்காக இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசேட தேடுதல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இந்திய தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்த குழுவைச் சேர்ந்த 5 பேர், இந்திய பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேற்படி மூன்று உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த மூன்று பேரை கைதுசெய்வதற்காக இந்திய பயங்கரவாத விசாரணை பிரிவினர், இலங்கை புலனாய்வு பிரிவினருடன் தகவல்களை பரிமாறி வருகின்றனர்.
அதேவேளை தமிழகத்தில் செயற்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகள் குறித்து விசாரணை நடத்த இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவின் கிளையொன்றை தமிழகத்தில் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களில் பலர் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.