வன்னியில் கடந்த சில நாட்களாக அதிகரித்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்றுமில்லாதவாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் தற்காலிகக் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்ததையடுத்து பாடசாலை போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். வீதிகளிலும் காணிகளிலும் மழை வெள்ளம் நிரம்பியுள்ளது. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது வன்னி.
நேற்றிலிருந்து வன்னிப் பகுதியில் என்றுமில்லாதவாறு மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. மழையின் வீழச்சி அதிகரித்துள்ள நிலையில் இந்த மழை தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நிரந்தர வீடுகள் இல்லாமல் தகரம் மற்றும் தறப்பாள் கூடாரங்களில் வசிக்கும் மக்களின் நிலமை கடும் மோசமாகவுள்ளது. அவர்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம் நுழைந்ததுடன் கூடாரங்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. பல இடங்களில் கூடாரங்களை விட்டு மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கின்றனர்.
மழை வெள்ளத்தை முன்னிட்டு மக்களை வெளியேற்ற எந்த வேளையிலும் தயாராக இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் பாதுகாப்பான பகுதிகளுககு மக்களை அழைத்துச் செல்லுவதாக தெரிவித்த பொழுது மக்க் றுத்துள்ளனர். மழையும் வெள்ளமும் அதிகரித்தால் தமது தொலைபேசிகளுக்கு அழைக்கும்படி இராணுவத்தினர் மக்களை கேட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரம் மழை காரணமாக முற்றிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் திருவையாறு, இரத்தினபுரம், கனகாம்பிகைககுளம், காஞ்சிபுரம், பெரிய பரந்தன், பன்னங்கண்டி, மருதநகர் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் தற்பொழுது மூழ்கியுள்ளன. குளங்களின் நீர்;நிலைகள் நிரம்பி வான் பாயும் நிலையில் அப் அபகுதிகளை அண்டி வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.