சீனாவின் மேலாதிக்கம் இலங்கையில் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். இவ்வாறு நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.
`நாம்’ அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது.
7-ம் நாள் நிகழ்ச்சியில் “முள்ளிவாய்க்கால் முடிவா, தொடக்கமா?” என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார்.
அவர், ‘’முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக்கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர்.
இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இப்புதிய அறவழிப் போரினை ஏற்று ஊக்குவிக்கின்றன.
ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டம் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையேயான போட்டி அரசியலில் சிக்கிச் சின்னாபின்னமாகி உள்ளது.
ஈழத்தில் இன்று வாழ்வை மீள் கட்டமைக்கத் தடுமாறும் விதவைகள், உடல் உறுப்புகள் இழந்தோர், அனாதைக் குழந்தைகள் ஆகியோருக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்.
மத்திய மாநில அரசுகளும் ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சமூக அமைப்புகளும் இணைந்து செயற்படும் முறைப்படியான புனரமைப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வேகமாக விரிந்து வரும் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்க- ஐரோப்பிய- ஜப்பான் நாடுகளுக்கு கவலை தருவதாகவும் உள்ளது.
சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள் என்று பேசினார்.