வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர்க்காலங்களிலும், போர் முடிவடைந்த பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யும் குடும்பங்களைச் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்திவருகின்றனர். சிறீலங்கா படையினராலும், ஆளுங்கட்சி அரசியல் வாதிகளினாலும் சாதாரண பொதுமக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதுடன், மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருவதனால் சிறீலங்கா அனைத்துலக சமூகத்தின் சீற்றத்திற்குள்ளாகியுள்ளதால் அதிலிருந்து மீள்வதற்காக மகிந்த அரசாங்கம் முழு அளவிலான அனைத்துப் பலத்தினையும் பிரயோகித்துவருகின்றது.
கடந்த 2010 ஆண்டு மகிந்தவினால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழவின் முன், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வாக்கு மூலம் அளிக்கப்பட்ட பின்னர், பலர் அச்சுறுத்தப்பட்டதுடன், கொழும்பிலுள்ள 4ஆம் மாடிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டதுடன், புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பியனுப்பினர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழுவில் முன் தாம் சுதந்திரமாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் கூறிய போதிலும், வாக்குமூலம் அளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் முறைப்பாடு செய்த பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் அடிக்கடி விசாரிக்கப்படுவதும், 4ஆம் மாடிக்கு வருமாறும் அழைப்புவிடுவதுமாக உள்ளனர். எனினும், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளார்.
இவ்வாறு போர்க்காலத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் காணாமல் போன அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் முடிவடைந்த பின்னார் 2007 ஆம் ஆண்டு நடுப் பகுதியிருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியும் அவர்களை கண்டறிவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பல தடவைகள், பல ஆணைக்குழு முன்ணிலையில் சாட்சியங்களாக வாக்குமூலம் வழங்கப்பட்டதுடன், சிறீலங்காவில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் என விண்ணப்பங்களையும், மனுக்களையும் கொடுத்துள்ளதுடன், காணாமல் போனவர்களை விடுதலை செய் அல்லது அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடு என கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தினர். எனினும், சிறீலங்கா அரசாங்கம் உட்பட சம்மந்தப்படடவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில்தான் இன்று பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளனர்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதிக்கு சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை யாரும் வெளிநாட்டில் இருப்போருக்கு அளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊர்தி ஒன்றில் சென்ற புலனாய்வுப் பிரிவினர் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டம் எனத் தெரிவித்து, அப்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இதன்போது, உங்களின் பிள்ளைகள் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளார்களா? அல்லது அப்படிப்பட்டவர்கள் தற்போது உள்ளார்களா? எனக் கேட்டுள்ளார்கள்.
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்று, அனைத்து சொத்துக்களையும் இழந்து, சொத்துக்கும் மேலான தமது உறவுகளை இழந்து தவிப்பவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணர்கின்றனர். எனினும், அச்சுறுத்தலுக்கு அடிபணியாத தம்பலகாம மக்கள் எங்கள் பிள்ளைகள் கடத்தப்பட்டும், கைது செய்தும் காணாமல் போயுள்ளார்கள். எனவே அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். எனினும் அதற்கு அவர்கள் எவ்விதமான பதில்களையும் புலனாய்வுப் பிரிவினர்கள் தெரிவிக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்தான், காணாமல் போனவர்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கோ அல்லது ஐ.நாவுக்கோ தக வல்களை வழங்கக் கூடாது என எச்சரித்துள்ளார்கள். பலதடவைகள் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட மக்கள் சீ.ஐ.டியினரின் நடவடிக்கை தொடர்பாக காணாமல் போன அமைப்பு உட்பட தொண்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்களின் நிலைகளை அறிந்து கொள்வதற்காக காணாமல் போனவர்களின் சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் பல நடவடிக்கை எடுத்த போது அதன் உறுப்பினர்களும் காணாமல் போன சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். மகிந்த அரசாங்கத்தின் கொடூரமான ஆட்சியினால் பொதுமக்களை எவ்விதமான ஜனநாயக ரீதியான போராட்டங்களையோ, அல்லது உரிமை கோரிய போராட்டங்களையோ முன்னெடுக்க முடியாத நிலையில்தான் மக்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுகின்றனர்.
சிறீலங்காவில், ஜனநாயகத்திற்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அறைகுறையாக இருக்கும் நீதித்துறையையும் குழியில் போட்டு மூடுவதற்காக மகிந்த அரசாங்கம் பல்வேறு அடாவடிகளையும் மேற்கொண்டுவருகின்றது. கண்ணியத் தொழிலாகக் கொள்ளப்படும் மருத்துவம், சட்டத்துறையினருக்கு நாளை என்ன நடக்கும் என்ற அச்சத்தில் இந்ததுறையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
இன்று சிறீலங்காவில் பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. வாய் திறந்து பேச முடியவில்லை. குற்றங்களையும், ஊழல்களையும் வெளிக் கொண்டுவர முடியவில்லை. எதிரணி அரசியல் வாதிகள் உட்பட சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை. இவ்வாறான நிலையில்தான் சர்வதேசத்தின் உதவிகள் இலங்கையிலுள்ளவர்களினால் கோரப்படுகின்றன.
தாங்கள் பாதிக்கப்பட்டால் அண்டைய நாடான இந்தியா உதவும் என கடந்த காலங்களில் இலங்கையில் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவோ குற்றங்களை செய்யும் மகிந்த அரசாங்கத்திற்கு ஊக்கமளிக்கும் செயற்பாடாக மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்களப் படைகளுக்கு பயிற்சிகளையும், தொழிநுட்ப வசதிகளையும் மேற்கொண்டுவருகிறது. ஒரு இனத்தின் அழிவைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பியுள்ள அண்டைய நாடுகள் இன்று பாதிக்கப்பட்ட சமூகத்தை மேலும் பாதிக்கும் வகையில் தனது செயற்த்திட்டங்களை முன்னெடுக்கின்றன.
இவ்வாறான நிலையில், யாழ்குடாநாட்டில் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை படையினரின் கண்காணிப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்ற நிலையில், வெள்ளை ஊர்தியில் கடத்துவதும், கைதுகள் எனவும் மீளவும் சிறீங்காப் படையினர் தமது கொடூரக் கரங்களை நீட்டியுள்ளனர்.
கடந்த கார்த்திகை மாதம் 27 நாள் அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய விடுதலைக்காக உயிர் நீர்த்தவர்களின் நினைவேந்தும் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதையடுத்து இன்றுவரையில் மாணவர்கள், முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உட்பட 52 பேர் கடத்தப்பட்டும், கைது செய்தும் வதை முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தடுத்துவைத்தல் தொடர்பாகவும், கைதுகள் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசாங்கத்தின் அடாவடிகளைக் கண்டித்தும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எமது உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்களினால் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக் கூடாதென படைப் புலனாய்வுப் பிரிவினர் மக்களை அச்சுறுத்திவருகின்றனர்.
அதுமாத்திரமல்ல, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ள சிறீலங்கா, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், யாழ்குடாநாட்டில் இடம்பெற்றுவரும் அகிம்சை வழியிலான போராட்டங்களை தடுப்பதிலும் பெரும் ஏற்பாடுகளை செய்துவருகிறது.
எவ்வாறாயினும், ஈழத்திலுள்ளவர்கள் தங்களால் இயன்றளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிக்காட்டிவருகின்ற போதிலும், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களையும், கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதே இன்றைய காலத்தில் தேவை.
நன்றி : ஈழமுரசு