Search

வன்னியில் போலி வெளிநாட்டு முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பல பெண்கள் மாயம்!

கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் போரால் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட வன்னிப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸார் கணிசமான இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வு என்ற போர்வையில் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க போரால் பாதிப்படைந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களையும் யுத்தத்தால் விதவையாக்கப்பட்ட பெண்களையும் குறிவைத்து சிலர் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு ஆளும்கட்சி அரசியல் வாதிகள் ஆசீர்வாதம் வழங்கிவருகின்றனர்.

வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கபடத்தனமான வாக்குறுதிகளை வழங்கி விதவைகளையும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தபெண்களையும் போலி வெளிநாட்டு முகவர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

இவர்கள் அழைத்துச்சென்ற ஓரிரு நாட்களுக்குள் இப்பெண்களுக்கும் வன்னியிலிருக்கும் உறவுகளுக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் இப்பெண்களுக்கு என்ன நடந்தது எனத்தெரியாத நிலையில் உறவினர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி,மாங்குளம், ஓமந்தை, கிழவன் குளம், கரிப்பட்டமுறிப்பு,முறிகண்டி போன்ற பகுதிகளில் வசித்த பல பெண்கள் இந் நயவஞ்சகர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.

இத்தகைய வெளிநாட்டு முகவர்கள் அரசியல்வாதிகளுடன் நேரடியான தொடர்புகளை வைத்துக்கொண்டு அவர்களுடைய வழிகாட்டலின்கீழ் பெண்களை கடத்திச்செல்வதால் இவ்விடயங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவுசெய்ய உறவினர்கள் அஞ்சுகிறனர்.

இவ்வாறான போலிமுகவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பதிவுசெய்யப்படாத வெளிநாட்டு முகவர் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் வெகுஜன அமைப்பக்களின் பிரதிநிதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை வெளிவராத பல சம்பவங்கள் திரை மறைவில் நடைபெறுவதாகவும் பெண்களுக்கெதிரான அநியாயங்களைத்தடுக்க சர்வதேச,உள்நாட்டு பெண்கள் அமைப்புக்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்தள்ளனர்.

கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் இப்பெண்களை இலகுவாக வெளிநாடுகளுக்கு அனுப்புவோம் என்ற போர்வையில் அழைத்தச்சென்று சீரழிப்பது மிகவும் வேதனையளிப்பதுடன் கேட்பதற்கு யாருமற்ற இனத்திலுள்ள வர்களை யாரும் எதுவும் செய்யலாம் என்ற நிலை இன்று வன்னியில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதும் புலனாகின்றது.

கடந்தகால யுத்தத்தினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பாதிப்படைந்துள்ள பொழுதும் பெண்கள் தெடர்பான அமைப்புக்களின் செயற்பாடுகள் வன்னியில் அறவே இல்லை எனலாம்.

தொண்டுநிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் அவலத்தினைக்காட்டி தாம் இலாபமடைகின்றனர்.

இதனால் வன்னி மக்களின் சமூக,பொருளாதார,வாழ்வாதார முன்னேற்றத்திற்கு இதுவரை வழிவகைகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனாலேயே தொழில் தேடி தூரதேசத்திற்கு வன்னியில் வாழும்பெண்கள் செல்லவேண்டியுள்ளது.

இத்தகைய நிலை போலிமுகவர்களுக்குக் களத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இப்பெண்களின் சமூக,பொருளாதார,வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் தெடர்புடைய சகலரும் விரைந்து செயற்பட முன்வரவேண்டும்.

குறிப்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையினையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இதனுடாகவே வன்னியில் வாழும் பாதிக்கப்பட்ட பெண்களைக்காப்பாற்ற முடியும்.

தாயகத்திலிருந்து,

மறவன்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *