தாயகத்தில் இன அழிப்பத் தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதப்போர் வெடிக்கும் (கட்டுரை)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் வட,கிழக்கில் போர்நடைபெற்ற காலத்தில் இருந்த பதற்றநிலை மீண்டும் வடக்கில் தேற்றுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வாழுகின்ற தமிழர்கள் நிச்சயமற்ற சூழலில் அச்சத்தடன் வாழும் நிலை இங்கு நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்தில் இணைத்தமையுடன் ஆரம்பமாகிய பிரச்சினை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது, முன்னாள் போராளிகளின் கைது எனத் தெடர்ந்துகொண்டே செல்கினறது.

இதனால் இப்பகுதிகளில் மீண்டும் பதற்றம் தோன்றியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த அரசாங்கம் இனங்களுக்கிடையே நல்ல எண்ணத்தினை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத்தினையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே முன்னாள் பெண்போராளிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கும் போர்வையில் மூன்று கட்டங்களாக சிங்கள இராணுவத்தில் இணைக்கும் திட்டத்தினை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்கின்றேம் என தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்த்துள்ளனர்.

இப்பெண்களை இரணுவத்தில் இணைக்கும் பொழுது புலிகள் இயக்கத்தில் இருந்த ஆண்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படாமை தெடர்பில் உற்றுநோக்கவேண்டியுள்ளது.

உண்மையாகவே இனநல்லிணக்கத்துடனான நல்லெண்ண நடவடிக்கையாக இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால் புலிகளின் ஆண்போராளிகளுக்கும் இராணுவத்தில் வாய்ப்பு வழங்கியிருக்குப்பட்டிருக்க வேண்டும்.

இதனை இந்த அரசாங்கம் செய்யத் தவறியுள்ளது.
மஹிந்த அரசாங்கமும் சிங்கள இராணுவமும் நீண்டகாலத் திட்டங்களின் ஊடாக தமிழ் இனஅழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலிகள் இயக்கத்தில் இருந்த ஆண்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் தமது ஆயுதமே தமக்கு எதிராகத் திரும்பும் என மஹிந்த அரசாங்கம் நினைத்திருக்கலாம்,இதுவே உண்மையாகக் கூடஇருக்கலாம்.

இதுபோலவே தமிழ் இளைஞர்களை பொலிஸ் படையில் சேர்த்த பொழுதும்இந்த இளைஞர்களுக்குப் பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை.

இவர்களை பொலிஸ் சமையல் இடங்களிலும் வீதிகளிலும் கடமைகளுக்கு அமர்த்தினர் என்பது யாவரும் அறிந்ததே. இதனால் கணிசமான இளைஞர்கள் பொலிஸ் வேலை வேண்டாம் என விலகியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க,தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்க்கும் பொழுது இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கமாட்டோம் எனச் சில சிங்கள இராணுவத் தளபதிகள் தெரிவித்திருந்தனர்.

இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படாவிடின் அவர்களை எடுபிடிவேலைக்கே பயன்படுத்தவேண்டும்.

இதனை ஒப்புறுதிப் படுத்துவதாக அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுள்ளன.

இந்தச் செய்திகள் உண்மை இல்லை என்பதற்கு அப்பால் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இடத்தில், எங்கட வீட்டுக்கட்டிலில பக்கத்து வீட்டுக்காரன் படுப்பதா…?’ என்ற கேள்வி தமிழ் இளைஞர்களின் மனங்களில் எழாமலிருந்திருக்க முடியாது.

இதன் வெளிப்பாடாகவே பல்கலைக்கழக இளைஞர்கள் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்.

இதனை அடக்க மஹிந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இதனால் தமிழ் மாணவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களை கிணற்றுத் தவளைகளாகவோ புத்தகப் பூச்சிகளாகவோ பார்க்கமுடியாது.

அவர்களே எதிர்காலத்தின தலைவர்களாகவும் நாட்டின் தூண்களாகவும் விளங்குகின்றவர்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதென்பது இலங்கையிலோ சர்வதேச நாடுகளிலோ புதிய விடையமாக இருந்துவிடப்போவதில்லை.

தென்னிலங்கையிலும் சிங்கள மாணவர்கள் பல அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிக்கொண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தென்பகுதி மாணவர்கள் செய்வது பயங்கரவாதமில்லையா?என்ற கேள்வி எழாமலில்லை.

இது இவ்வாறிருக்க, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினை பயங்கரவாதச்சட்டத்தின் கீழ்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனராம்! இவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக வெலிக்கந்த சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவலை வெளியிடும் உரிமை மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்கு எச் சட்டத்தின் கீழ் யாரால் வழங்கப்பட்டுள்ளது?

மாணவர்களின் விடுதலை தெடர்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் எவ்வாறான அதிகாரத்துடன் இராணுவத்தினரிடம் கலந்துரையாடுகின்றனர் என்ற கேள்வி புத்திஜீவிகள் மட்டத்தில் எழாமலில்லை.

இந்த இராணுவத்தினரிடம் தொடர்புகளை வைத்திருப்பதன் ஊடாக பல்கலைக்கழக சமூகத்தினர் எதையுமே சாதித்துவிட முடியாது என்பது நான்கு மாணவர்களை விடுவிக்க முடியாத நிலையினூடாக வெளிப்படுகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு நபரையும் பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியாது.

பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுகின்றவர்கள் அந்த நாட்டின் இறையாண்மைககு எதிராக தேசத்துரோகக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிரூபிப்புசுமை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடமே உள்ளது.

இத்தகைய வழக்குகளுக்கான தீர்ப்பிற்கு கைதுசெய்யப்பட்ட நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மிக முக்கியமான இடத்தை பெறுகின்றது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களைப் பொறுத்தவரை தூண்டுதல், வாக்குறுதி, அச்சுறுத்தல் என்பன இல்லாமல் சுயாதீனமாக வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்பது சான்றுச்சட்ட விதிகளின் கீழ் சந்தேக நபர்களை நிரபராதிகள் அல்ல என நிரூபிப்பதற்கு வழக்குத்தொடுநர் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.

இந்த இடத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அவர்களுடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளென இலங்கை நீதிமன்றம் முடிவெடுத்து புனர்வாழ்விற்கு அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்( இலங்கை அரசாங்க அதிகாரி ) அறிவித்துள்ளார்.

இந்த இடத்தில் மாணவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்கள் அவர்களை நியாயமான சந்தேகத்திற்கப்பால் நிரபராதியல்ல என நிரூபிக்ககூடிய சட்டத்தேவைகளை பூர்த்தி செய்துள்ளதா ?என்ற கேள்வி சராசரி அறிவுள்ள எந்த மனிதனுக்கும் எழுவதுஇயற்கையே.

இது மாணவர்களை குற்றமற்றவர்கள் என இலங்கை நீதிமன்றங்களில் நிரூபிக்க போதுமானதாக உள்ளது.

இதேபோல்,பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களையே புனர்வாழ்விற்கு அனுப்ப முடியும.

மாறாக ஆளும் அரசாங்க இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உரிமை மறுப்புகளுக்கு எதிராக போராடியவர்களை (மாணவர்களை) கைது செய்யவோ,புனர்வாழ்வளிக்கவோ முடியாது.

எனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை சட்டரீதியற்ற ஒன்றாகும்.

இதற்குப் பரிகாரம்தேட மாணவர்களின் சார்பில் அடிப்படை மனித உரிமை வழக்குகள் தாக்கல்செய்யக் கூடிய ஏதுநிலை காணப்படுகிறது.

இப்பிணக்கினைச் சட்டரீதியாக அணுகி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தினை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினரிடமே காணப்படுகிறது.

மாணவர்களின் நிலை இவ்வாறிருக்க,கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களையும் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் கைது செய்வதாலும் வடபகுதியில் பதட்டநிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சர்வதேச நிறுவனங்களிடம் முறையிடக்கூடாது என இராணுவம் அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலைமைகள்இலங்கையில் மீண்டும் ஒரு இனப்போரை ஏற்படுத்தக்கூடிய அபாயச் சங்கை ஊதுவதாகவுள்ளது என்பதை யாருமே மறுக்கமுடியாது.

அடக்கப்படும் இனத்திற்காக இளைஞர்கள் அடக்கு முறையாளர்களை எதிர்த்து போராடுவது உலக வரலாறுகள் எமக்கு விட்டுச் சென்ற காலத்தின் பதிவுகளாகும்.

இதனையே இலங்கையிலும் கடந்த எழுபதுகளிலிருந்து 2009வரையான காலப்பகுதியில் எமது இளைஞர்களும் செய்தனர்.

இந்நிலை மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மஹிந்த அரசாங்கத்தி கடமையாகும்.

இதைவிடுத்து இனஅழிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்த இந்த அரசாங்கம் ஈடுபடுமானால் இலங்கைத்தீவில் மீண்டும் போர் இடம்பெறுவதை எவராலும் தடுக்கமுடியாது.

தாயகத்திலிருந்து ,

மறவன்

Leave a Reply

Your email address will not be published.