தமிழ் ஈழ விடியலுக்குப் பாடுபட மதிமுக உறுதி பூண்டு உள்ளது -வைகோ

இலங்கையில் ஈழத்தமிழர்களையும், நடுக்கடலில் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கும் ராஜபக்ஷ அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசின் செயல் வெட்கக் கேடானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.ஈழத்தில் இனக்கொலை,இதயத்தில் இரத்தம்´ என்ற நூலும், குறுந்தட்டும் மராத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டுவிழா இன்று (05) மும்பையில் நடைபெற உள்ளது.இது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் வைகோ பேசியதாவது,

 மத்திய பிரதேசத்திற்கு வருகை தந்த ராஜபக்ஷவை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோதே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை இந்தியா முழுவதும் உணரச்செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம்.

 இதனையடுத்து இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் கடந்த நவம்பர் 26ம் திகதி டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனை பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளியிட்டார்.தற்போது மராத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் சனிக்கிழமையன்று மும்பையில் ராம் ஜெத்மலானி தலைமையில் வெளியிடப்பட உள்ளது.

 இலங்கை அரசு தமிழ் இனத்தையே கொன்று குவித்துள்ளது. சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

 தமிழர்களை கொன்று குவிக்கும் ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ராணுவ உதவி செய்வது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், அம்மாநில மொழிகளில் நூலையும் குறுந்தட்டையும் தயாரித்து, ஈழத் தமிழர் கொடுந்துயரை இந்தியாவிலே உள்ள பல்வேறு தேசிய இன மக்களிடமும் இதுபற்றிய உண்மைகளை அறியச் செய்து, தமிழ் ஈழ விடியலுக்குப் பாடுபட மதிமுக உறுதி பூண்டு உள்ளது என்றும் வைகோ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.