Search

வாழ்நாள் சாதனையாளருக்கு டென்மார்க்கில் பாராட்டு விழா

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் ஆசிரியர் கி. செல்லத்துரைக்கு அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சியால் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு டென்மார்க்கில் உள்ள கலைஞர் பெருமக்களால் பல்வேறு நகரங்களிலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 06.03.2016 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் அந்நாட்டில் வாழும் கலைஞர்களாலும், வல்வை நண்பர்களாலும் பாராட்டுவிழா ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்தருணம் இந்தப் பரிசும், நிகழ்வும் சாதாரணமான ஒன்றல்ல..

இதை டென்மார்க் வாழ் தமிழ் மக்களிடையே எடுத்துச் சென்று, கிடைத்தற்கரிய இந்த வாழ்வை சாதனையால் பெருமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

டென்மார்க் கலைஞர்களால் பல நகரங்களிலும் இந்த விழா முன்னெடுக்கப்பட இருக்கிறது, அந்தவகையில் கேர்னிங் நகரில் முதலாவது பாராட்டு விழா நடைபெறுகிறது.

சுவிற்சலாந்தைப் போல பெருந்தொகை மக்கள் வாழும் நாடல்ல டென்மார்க், இதுபோல பெருந்தொகை மக்களை ஒன்றிணைத்து இப்படியொரு விருதை வழங்குவது சாதாரண விடயமல்ல.. சரியான இடம், சரியான காலம், சரியான வியூகம் வகுத்து காலத்தினால் செய்ய வேண்டிய காரியத்தை செய்த பெருமை ஐ.பி.சிக்கே சாரும் என்று விழாவில் பேசிய ஆசிரியர் கி.செல்லத்துரை தெரிவித்தார்.

திரைப்பட நடிகர் வஸந்த் வரவேற்புரை நிகழ்த்த, தலைமையுரை ஆற்றிய நடிகவிநோதன் ரி.யோகராஜா வல்வையின் நாடக நடிகர்களின் ஆற்றல்கள் பற்றி எடுத்துரைத்து, கலைஞர்கள், தலைவர்கள், திறமைசாலிகள், சாதனையாளர் பிறந்த ஊர் வல்வை என்று வல்வை மண்ணுக்கு பராட்டுக்களை தெரிவித்து, ஆசிரியர் கி.செல்லத்துரையுடன் நாடகப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்களை எடுத்துரைத்து இது பெறுதற்கரிய சாதனை என்று போற்றினார்.

இத்தனையாயிரம் பேர் கூடி நின்று ஒருவருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்குவது சாதாரண விடயமல்ல, இந்தப் பரிசே அவருடைய திறமைக்கு சான்றாகும் என்று கூறி இது நான் பெற்ற பரிசாக இன்பமடைகிறேன் என்று பாராட்டி மகிழ்ந்தார்.

கேர்னிங் நகரசபை உறுப்பினர் வல்வை தி.அருளானந்தராஜா ஆசிரியருடன் சிறு பராயத்தில் இருந்தே வல்வையில் தனக்கிருந்த தொடர்பை எடுத்து விளக்கி, வல்வை மண் அவருக்கு கொடுத்த அடித்தளமே இன்று இந்தச் சாதனையை எட்டித்தொட காரணமாகும்.

அவருக்கு மேலும் மேலும் விருதுகள் வரும், அதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றும் சுட்டிக்காட்டி நீண்ட நேரம் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார்.

வல்வை மக்கள் சார்பில் திரு. செல்வக்கதிரமலை, தெய்வன் வடிவேலு, இராமதாசன் வைரமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்து கௌரவித்தனர்.

இவர் படைக்கும் சாதனைகளால் வல்வை மாதா சிலிர்த்து நிற்கிறாள், வல்வை மண் பெருமையடைகிறது என்று மூவரும் பாரட்டினர், எடுத்த காலை என்றும் துணிவுடன் முன்னோக்கி வைக்கும் அவருடைய துணிச்சல் அவருக்கு வல்வை தந்த சொத்து, அதுவே அவருடைய வெற்றியின் இரகசியம் என்றும் போற்றினார்கள்.

நடன ஆசிரியை சுமித்திரா சுகேந்திரா, கவிஞர். வேலணையூர் பொன்னண்ணா, கலைச்செல்வன், வள்ளுவன், இளங்கோ, சச்சி, ரவிசங்கர், கலைச்செல்வன், திருமகள், கவிஞர் ராஜா குணசீலன், உட்பட பலர் பேசினர், சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பாராட்டுரைகள் இடம் பெற்றன, அத்தோடு பாடகர் ஜெக்குமார் தலைமையில் இரண்டு மணி நேரம் பாடல் இசை நிகழ்ச்சியும், விருந்துபசாரமும் நடைபெற்றன.

டென்மார்க்கின் சோசல் டெமக்கிரட்டி கட்சியின் முக்கிய உறுப்பினர் தர்மா தர்மகுலசிங்கம் முத்தமிழ் வித்தகர் என்ற பட்டமளித்து பாராட்டினார்.
Leave a Reply

Your email address will not be published.