Search

புகைக்குண்டு வரலாறும் அதன் சிறப்பும்

வல்வெட்டித்துறை நெடியகாடு மக்களால் புகைக்குண்டு என்று அழைக்கப்படும் காகிதத்தால் ஆன
இந்த புகைக்குண்டுக்கு நீண்ட வரலாறும், மிக சிறப்பான பக்கமும் இருக்கின்றது. முதன் முதலில் வல்வெட்டித்துறை மக்களின் கைகளில் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தின் முன்பு நீராவிக்கப்பல் இலங்கையில் பாவனைக்கு வரும் காலம் முன் கடல் கடந்து வணிகம் செய்யும் செட்டிமாரும், மாலுமிகளும் நிறைந்து வாழ்ந்த வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பலில் இந்தியா, பர்மா, மலாயா எனவும்
அரேபியா, எகிப்து, கிறீஸ், உரோமா ராஜ்ஜியம்  என நீண்ட கடல் கடந்து வணிகம் செய்து வந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் முழு இலங்கையும் பெரும்பாலும் வடபகுதியின் பாய்மரக்கப்பலையே நம்பியிருந்தனர். அதிலும் வல்வெட்டித்துறையே பிரதான துறைமுகமாக விளங்கியது. 1938 ம் ஆண்டு ஒரு பாய்மரக்கப்பலை(அன்னபூரணி) அமெரிக்கருக்கு விற்று அதை அமெரிக்கா வரை ஓட்டி சென்று கையளித்தவர்கள் வல்வெட்டித்துறையினர்.

அப்படி ஒரு வணிகத்துக்காக ஆயிரத்து தொழாயிரத்து இருபத்து ஒன்பதாம் (1929) ஆண்டு பர்மா சென்று திரும்பி வந்து கொண்டிருந்த கொத்தியாலடி இறங்குதுறைக்கு சொந்தமான பாய்மரக்கப்பல் நடுக்கடலில் பயணிக்கும் வேளையில் ஆகாயத்தில் ஏதோவொரு கருப்பு உருவத்தை கண்டார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றின் திசைக்கு ஏற்ப கீழுறங்கி வந்து கொண்டிருந்தது. பாய்மரக்கப்பலில் இருந்த மாலுமிகள் அந்த வானில் மிதந்து வந்த அதிசய உருவத்தை கைப்பற்றுவதற்காக பாய்மரக்கப்பலை அத்திசைக்கேற்ப திருப்பி செலுத்தினர். இறுதியாக காகிதத்தினாலான அந்த உருவத்தை நீரில் விழாமல் ஏந்தினர். அந்த பாய்மரக்கப்பலில் இருந்தவர்கள் பெரும்பாண்மையோர் வல்வெட்டித்துறையில் உள்ள நெடியகாடு என்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

இயந்திர படகென்றால் இலகுவாக செலுத்தலாம் ஆனால் பாய்மரக்கப்பலால் காற்றின் வேகத்துக்கு வரும் அந்த உருவத்தை ஏந்திய அன்றைய மாலுமிகள் மிக திறமைசாளிகளே.
அதனை கரைக்கு கொண்டு வந்த நெடியகாடு மக்கள் அதன் உருவமும் எரிந்து அணைந்திருந்த தீப்பந்தத்தை வைத்து அதன் செயற்பாடு என்பவற்றை கணக்கிட்டாலும் அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கு சில காலங்கள் சென்றது. அந்த உருவத்திற்கு #நெடியகாடு மக்களால் அதற்கு பொருத்தமாக #புகைக்குண்டு” என பெயர் சூட்டினார்கள். அன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையின் எப்பாகத்திலும் இதுபோன்று காகிதத்தில் வல்வெட்டித்துறையை தவிர வேறு எங்கும் செய்து விடுவதில்லை. 1989 ம் ஆண்டு தீர்த்த திருவிழாவின் போது வானில் பறந்த புகைக்குண்டை கண்ட இலங்கை, இந்திய ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்திய வரலாறும் உண்டு.

விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பின் அன்றைய நெடியகாடு மக்கள் ஒரு முடிவெடுத்தார்கள். வல்வெட்டித்துறை மக்களின் பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்துமாரி அம்பாளின் திருவிழாவின் இறுதி நாளான சித்திரை பௌர்ணமி அன்று வரும் தீர்த்த திருவிழாவின்போது ஊறணி சமுத்தித்திற்கு தீர்த்தமாட வந்து பின் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் தங்கி நள்ளிரவு கடந்த பின் தன் ஆலயம் நோக்கி செல்லும் அந்த நாள் மட்டும் “புகைக்குண்டை” விண்ணில் செலுத்தி விழாவை சிறப்பிப்போம் என. இதற்கான காரணமும் உள்ளது அந்த காலத்தில் வல்வையுள்ள பெரும்பாலும் வீடுகள் கூறையால் வேயப்பட்டவையும், அத்தோடு மரத்திலான பாரிய பாய்மரக்கப்பல் கட்டும் வாடிகளும் நிறைந்திருப்பதனால் வருடத்தில் ஒரு நாள் என்று அன்றைய நெடியகாடு மக்கள் முடிவெடுத்தார்கள்.

அதற்கான அச்சு ஒன்றும் பலகையினால் செய்து அம்பாளின் கொடி ஏறிய பின்தான் புகைக்குண்டின் அச்சை வெளியில் எடுப்பதென ஒரு இருக்கமான முடிவெடுத்தார்கள்.

இந்த புகைகுண்டை ஆரம்பத்தில் ரிசு பேப்பரில் 4*12 என 48 பேப்பரில் 7 அடி உயர பல வண்ணங்களில் விட்டார்கள். ஆரம்பத்தில் ஒரு, இரு பத்து புகைக்குண்டு செய்தார்கள். 1965 ம் ஆண்டுக்கு பின் அம்பாளின் தீர்த்த திருவிழா  “வல்வை இந்திர விழா” என பெரும் விழாவாக மாறிய பின் நூற்றுக்கு மேற்பட்ட புகைக்குண்டை செய்து விட்டார்கள். வானில் பலவித வண்ணங்களில் ஆடி அசைந்து தீப்பந்தத்துடன் செல்லும் காட்சியை கான இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் 70,80 களில் வல்வையை நோக்கி மக்கள் படையெடுப்பார்கள். இதில் சாதனை என்னவென்றால் இதன் அளவு வடிவங்களை வைத்து 7 அடி புகைகுண்டை நெடியகாடு மக்களால் 25, 40,50, 60 அடி என செய்து 1980 ஆண்டு 80 அடி உயர ராட்சத புகைக்குண்டு செய்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தினார்கள். அந்த ஆண்டு வரைக்கும் 80 அடி ராட்சத புகைக்குண்டு உலகில் எங்கும் காகிதத்தில் செய்து விட்டதாக அறியவில்லை.

நெடியகாடு மக்கள் தங்கள் சிற்றூரில் இருக்கும் குல தெய்வமான திருச்சிற்றம்பல பிள்ளையார் திருவிழாவின் போது கூட இப்புகைகுண்டை விடாமல். பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பாளின் தீர்த்த  திருவிழாவின்போது மட்டும் விண்ணில் செலுத்துவோம் என்ற நிலைப்பாட்டுக்கு அன்றைய முன்னோருக்கும் சரி இன்றைய இளைஞர்களுக்கும் சரி ஒரு பரந்து பட்ட செயலுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

விடுதலைப்போர் தீவிரம் பெற்று தியாக சீலர்கள் விண்ணில் கரைந்த போது அவர்களுக்காக புகைக்குண்டு விட விடுதலைப்புலிகள் கேட்ட போது முதல் முறையாக 1990 ம் ஆண்டு வடமராட்சியுள்ள அனைத்து மாவீரர்களுக்காகவும் விண்ணில் வலம் வரத்தொடங்கியது புகைக்குண்டு. அத்தோடு விடுதலைப்புலிகளின் சில தேவைகளுக்காக புகைக்குண்டு விண்ணில் பறந்தது. அவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நெடியகாடு இளைஞர்கள் கூடவே செல்ல இயலாத இடங்களில் எப்படி நெருப்பில் இருந்து வரும் புகையை உள் செலுத்தி விண்ணுக்கு அனுப்புவது என்று செய்து காட்டி அவர்களிடமே கொடுத்து விடுவார்கள்.

எந்த அம்பாளுக்காக 60 வருடத்திற்கு மேலாக புகைக்குண்டு விண்ணை அலங்கரித்ததோ. அதே அம்பாளுக்கும் தன் புகழ் பரப்பி நிக்கும் வல்வைக்கும் 1991 ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் 300 க்கு மேற்பட்ட பீப்பாய் குண்டு போட்டு வல்வையையும், அம்பாள் கோயிலையும் சிதறடித்து அம்பாள் கோயிலுக்கு இரண்டரைக்கோடி ரூபாவுக்கு மேல் செலவை வைத்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அந்த அனர்த்தம் நடந்த சில மாதங்களிலேயே (1991) கொழும்பில் கொள்ளப்பட்டபோது. நெடியகாடு இளைஞர்களால் ஒரு சில மணித்தியாலங்களில் 60 அடி உயரமான ராட்சத புகைக்குண்டு உறுவாக்கப்பட்டு வானில் பறக்க விட்டனர். முழு வல்வெட்டித்துறையும் சந்தோசத்தில் குதுகாலித்தது.  இதற்கு முன்னும் பிறகும் விடுதலைப்புலிகளின் பல வெற்றி விழாக்களுக்கு இந்த புகைக்குண்டுகளே நிகழ்வின் சிறப்பை மேலும் மெருகூற்றும்.

இடம் பெயர்ந்து வன்னி சென்ற போது 1999 ம் ஆண்டு தேசியத்தலைவரின் 45 வது பிறந்த தினத்திற்கு 44 சிறிய புகைக்குண்டும் 45 ஆவதாக 45 அடி உயரமுள்ள புகைக்குண்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இனங்க. விசுவமடு பாடசாலையில் கட்டிடத்தில் வைத்து செய்து. புதுக்குடியிருப்பு பாடசாலை மைதானத்தில் விடுவதற்காக நாம் சென்றபோது எம்மை அறியாத சந்தோசம். முதன் முதலாக தேசியத்தலைவரின் பிறந்த நாளுக்காக வன்னி மண்ணில் இருந்து வானில் பறக்க விடுகிறோம் என்பதை நினைத்து. ஆயிக்கணகான மக்கள் மத்தியில் மிக அழகாக ஆடி அசைந்து சென்று தேசியத்தலைவரின் பிறந்த நாளை சிறப்பித்த இந்த புகைக்குண்டுக்கு அடுத்த இருவருடங்களில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

2001 ஆண்டு புலிகளின் காவல்துறையின் 10 வது ஆண்டு விழாவுக்காக 10 புகைக்குண்டுகளுடன் அழைக்கப்பட்டோம் பிரயோத்தியமான அமைக்கப்பட்ட மைதானத்தின் கரையில் நின்று தாங்கள் சொல்லும் நேரங்களில் புகைக்குண்டை விடுங்கள் என கட்டளைகள் வந்தன. அதன்படியே ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் தருணத்தில் என்ன ஆச்சரியம் தேசியத்தலைவர் அவர்கள் சிறிய மேடையில் ஏறுகின்றார். அணி வகுப்பு மரியாதையை ஏற்று அடுத்து சில நேரம் அணி வீரர்களை பார்வையிடுகின்றார் அதன் பின் புகைக்குண்டு விண்ணில் செலுத்தும் திசைக்கு மிக வேகமாக வருகின்றார். வந்து அங்கு நிக்கும் நெடியகாடு இளைஞர் அணியில் உள்ள அனைவருக்கும் வணக்கம் சொல்கின்றார். அதன்பின் அவரை சுற்றி நின்ற தளபதிக்களுக்கும் போராளிகளுக்கும் இந்த புகைக்குண்டை பற்றி விபரிக்கிறார் தான் சிறு வயதில் பார்த்ததையும். வல்வெட்டித்துறையை தவிர இலங்கையில் எங்கும் விடுவதில்லை என இந்த புகைக்குண்டின் விளம்பரபிரியராக சில நிமிடங்கள் தாண்டி தேசியத்தலைவர் மாறியது அங்கு நின்ற இளைஞர் அணிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாது எமது ஊர் புகைக்குண்டுக்கும் பெருமை சேர்ந்தது.

1980 களின் பிறகே நெடியகாடு மக்களின் கைகளில் இருந்து புகைகுண்டு பிற ஊர்களுக்கு பறவியது என்றாலும் 90 களின் பின்பே பிற ஊர்களில் வெற்றிகரமாக விண்ணில் எழுந்தது. ஆனால் ராட்சத (25 அடிக்கு மேலான) புகைக்குண்டு இன்றும் வல்வெட்டித்துறை நெடியகாட்டில்தான் கான முடிகின்றது. வல்வெட்டித்துறை மக்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அதன் மகிமையை நீண்ட 87 ஆண்டு காலம் போற்றிப்பாதுகாத்த வல்வெட்டித்துறை நெடியகாடு முன்னோர்களுக்கு எம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

-பொன் கணேஷ்

 
Leave a Reply

Your email address will not be published.