கடந்த வருடம் பெல்ஜியத்தில் தங்கம் வென்ற குட்டிப் பையன்.
இப்போது மோல்டாவில் நடைபெற்ற போட்டியில்
மீண்டும் தங்கம் வென்றிருக்கின்றார் இந்தப்
பத்து வயதைத் தொட்டு நிற்கும் பாலகன்.
இவரது சாதனைகள் மூலமாக வல்வை மண் மீண்டும் பெருமையடைகின்றது.
வல்வையை பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.திருமதி.கருணாகரன் கவிதா தம்பதியினரின் புதல்வன் அகிலன் தான் இந்தச் சாதனை மூலம் நம் வல்வைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
லண்டனில் ஆசான் “சென்சே கணேசலிங்கம்” அவர்களின் கராத்தே பள்ளியில் கராத்தே கற்று வரும்
அகிலன் கருணாகரன் மீண்டும் தனது அதிரடி ஆட்டம் மூலம் சாம்பியனாகி எங்களை எல்லாம் பெருமைப்பட வைத்திருக்கின்றார்.
தெற்கு ஐரோப்பியாவின் மோல்ட்டா (Malta) என்னும் நாட்டில் கடந்த வாரம் 18 /19ம் திகதிகளில் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றன.
இதில் 7- 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் 17 நாடுகளில் இருந்து வந்த 26 போட்டியாளர்களில் காட்டாவில் முதலாம் இடம், குமித்தே வில் முதலாம் இடம் என இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் .
அது மட்டுமில்லாமல், இவரது அசாத்திய திறமையில் நம்பிக்கை கொண்ட ஆசான் கணேசலிங்கம்
இவரை 34 பேர் பங்கு கொண்ட 9-11 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிட வைத்து அந்தப் பிரிவில் காட்டாவில் இரண்டாம் இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கின்றார்.
அகிலனின் அக்கா ஆர்த்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற13 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கம் வென்று உலக சாம்பியனாக வந்தவர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள் வல்வையின் முன்னாள் உதைபந்தாட்ட வீரர் திரு. கதிர்காமலிங்கம் அவர்களின் பேரப்பிள்ளைகள் ஆவர்.























