Search

முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம்.

தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் – என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் மற்றைய ‘விசேட’ தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த ‘முட்டாள்கள் தினத்தில்’ தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்!

அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக் காட்டும் தினமாகவும் இந்த முட்டாள்கள் தினம் அமைந்துள்ளது.

விடயங்களை அறிந்து கொள்பவன் ‘அறிஞன்’ ஆகின்றான். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’- என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ ஆகிவிடுகின்றான் – என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகின்றது.

நாங்கள் ஓர் ஆண்டின் மற்றைய 364 நாட்களில் எப்படிப்பட்டவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதை ஞாபகப்பத்துவதுதான் இந்த முட்டாள்கள் தினமான ஏப்பிரல் முதலாம் திகதியாகும் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர்(பெயர் மறந்துவிட்டது) கூறியுள்ளார்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவதுபோல் ஒரு முட்டாளை அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் –

என்று ‘யாரோ’ ஒருவரும் (இவரின் பெயரும் மறந்துவிட்டது) கூறியுள்ளார்.

ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினமாக அழைக்கப்பட்டு வருவதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் ஏற்புடைத்ததாக விளங்குகின்ற காரணத்தை முதலில் கவனிப்போம்.

16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பியாவின் பல தேசங்களில் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தன. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜீலியன் ஆண்டுக் கணிப்பு முறையைப் புறம் தள்ளி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி மாதம் முதலாம் திகதியன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் ‘புதிய’ புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் தேசம் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன. கிறிஸ்தவர் உலகிற்குப் புதிய புத்தாண்டுத் தினமும், புதிய நாட்காட்டி கணிப்பும் அறிமுகமாகியது.

ஆயினும் சராசரிப் பொதுமக்கள் இந்தப் புதிய வழக்கத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகத் தொடர்ந்தும் கொண்டாடி வந்தார்கள். அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்ளவதையும் அம் மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று- என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சுமொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய தினம்தான் ஏப்பிரல் முதலாம் தினம் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.

ஏப்பிரல் முதலாம் திகதியன்று தனி மனிதர்களை மட்டும் முட்டாளாக்காமல் பெரிய கூட்டத்தையே முட்டாளாக்கக் கூடிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஊடகங்கள் தொடர்பாக உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்களைச் குறிப்பிடலாம்.

1965ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று BBC சேவை ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய தொழில் நுட்பத்தினை உபயோகித்து தம்முடைய வானலைகள் ஊடாக நறுமணத்தைப் பரப்புவதாக BBC அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல நேயர்கள் BBC ஐத் தொடர்பு கொண்டு இந்த ‘நறு’ மண முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டுகள் வழங்கியதுதான்.!

1976ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று பட்ரிக் மூர் என்கின்ற பிரிட்டிஷ் விண்வெளி வீரர் BBC வானொலிச் சேவையினூடாக ஒரு தகவலை வெளியிட்டார். விண்வெளியில் இரண்டு கிரகங்கள் ஒரு வித்தியாசமான கோண நேர்கோட்டில் வரவிருப்பதாகவும, அந்த நேரத்தில் புவியீர்ப்புச் சக்தியின் வலு குறைந்து விடும் என்றும் பட்ரிக் வானொலி ஊடாக அறிவித்தார். இந்த இரண்டு கிரகங்களும் இந்த நேர் கோட்டில் வரவிருக்கும் நேரம் காலை 9-47 மணி என்றும் அந்த நேரத்தில் துள்ளிக் குதிப்பவர்கள் அதிக உயரத்திற்கு துள்ளிக் குதிக்க முடியும் என்றும் பட்ரிக் கூறினார். ஆகவே 1976ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று காலை 9-47 மணிக்கு எவ்வளவே பேர் துள்ளிக் குதித்து இன்புற்றார்கள். துள்ளிக் குதித்தவர்களில் பலர் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி தங்களுடைய புதிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஏப்பிரல் முதல் திகதி இப்படியான வேடிக்கைகளை மட்டுமல்லாது பல வினைகளையும் கொண்டு வந்துள்ளது. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்பிரல் முதல் திகதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.(அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்றும் சொல்லலாம்.)

ஏப்பிரல் முதலாம் திகதியன்று திருமணம் செய்கின்றவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் அடங்கியிருப்பான் அவனது மனைவி அவனை நிரந்தரமாகவே ஆட்சி செய்து வருவாள் என்று ஏப்பிரல் முதல் திகதி குறித்து ஒரு மூடநம்பிக்கை உண்டு (மற்றைய நாட்கள் மட்டும் விதிவிலக்கா? என்று என்பின்னால் இருந்து ஒரு குரல் வருகின்றது!!?)

அதேபோல் எப்பிரல் முதலாம் திகதியன்று பிறப்பவர்களுக்கு அநேகமான அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன என்றும் ஆனால் இவர்களுக்கு சூதாட்டம் கைகெடுக்காது என்றும் இன்னுமொரு மூடநம்பிக்கையும் உண்டு.

அட மூட நம்பிக்கைகள் என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டங்களில் மட்டும்தானா, மற்றைய கொண்டாட்டங்களில் இல்லையா என்று நேயர்கள் கேட்கக் கூடும். அத்தோடு மற்றைய தினங்கள் மட்டும் புத்திசாலித்தனமான தினங்களா? என்றும் சிலர் எண்ணக் கூடும்!
*********************************
இவை நிற்க இந்த ஏப்ரல் மாதத்தில் தான் தமிழர்களும் புதுவருடத்தை கொண்டாடுகின்றனர்!? (அதாவது தமிழுக்கு ஏப்ரல் 1)அப்போ தமிழரும்…..?
*********************************
Leave a Reply

Your email address will not be published.