
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.அதிகாலை வேளை இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்த விநியோகப்பணியாளர் வீதியால் பயணித்த பேருந்தில் தப்பித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளதாகவும் உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.யு