பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்பு குறித்த இராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டம் ரஜௌரியில் நடைபெற்றது.
பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் உள்ள மெந்தார் செக்டருக்குள் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய 2 வீரர்கள் பலியாகினர். அதில் ஒரு வீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளது பாகிஸ்தான் படை.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சாதிக்கிறது பாகிஸ்தான். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீரை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பாகிஸ்தானின் மனிதநேயமற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இது குறித்து பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு எச்சரிக்கையும் விடுத்தார்.
இதற்கிடையே பாதுகாப்பு குறித்து விவாதிக்க ராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட குழு கூட்டம் இன்று பிற்பகல் 25 இன்பான்ட்ரி பிரிவின் தலைமையகமான ரஜௌரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டனர். கொல்லப்பட்ட ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகியோரின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.