பொங்கலோ பொங்கல்…
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
கல்லு மூண்டு வச்ச அடுப்பில
கனதியான புது மண் பானை வச்சு
முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு
பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு
புது நெல்லு மணி விளக்கி
பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு
பக்குவமா சக்கரை கலந்து
பதமாக வெந்து வர
முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும்
ஏலத்தூளும் தூவி
பொங்கல் பொங்கி வர
வெடி சுட்டு
பொங்கலோ பொங்கல் எண்டு
பாட்டி குலவையிட
பக்கத்துக்கு வீட்டிலும்
முன் வீட்டிலும் கூட
வெடியோசை வானைப் பிளத்தது
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
இது
முன்பொரு காலம்.
ஆனால் இப்ப
முன் வீட்டு குடும்பம் இன்னும்
முகாம்ல இருந்து வரயில்ல
முள்ளு கம்பிக்குள்ள
முழுசா அடைபட்டு இருக்கினம்
ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பக்கத்துக்கு விட்டில இருந்த
பரமசிவத்தார்ட பெடியன்
வன்னில இருந்து வரயிக்கை
வழியில காணாமல் போனவன்
இன்னும் வீடு வரயில்ல
ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
விதானையார் வினாசித்தம்பி வீட்டில
ரெண்டு நாள் முன்னால
விறுக்கேண்டு வந்த
வெள்ளை வானால வில்லங்கம் …
விதானையார்ட மனிசி அழுதா…
ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
தெரு முனையில
இருக்கிற சின்னையா விட்டில
படிக்க எண்டு
பல்கலைக்கழகம் போன
பரந்தாமன் திரும்பி வார வழியில
படக்கெண்டு மறிச்சவங்கள்…
பிடிச்சு போனவங்கள்…
இன்னும் விடயில்ல
ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்…