கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 101 பாடசாலைகளில் 331 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் இங்கு கல்வி கற்கும் 29 ஆயிரத்து 554 மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர்களும் அப்பகுதி கல்வி ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
போரின் போது எமது சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்து அதன் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ளோம். பிள்ளைகளின் கல்வியையே நாம் மூலதனமாகக் கருதுகின்றோம்.
ஆனால் அதுவும் தற்போது இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை எமக்கு கவலை அளிக்கின்றது.எமது பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையங்களின் அளவு மிகக் குறைவாகக் காணப்படுவதனால் பாடசாலைக் கல்வியை நம்பியே எமது மாணவர்கள் உள்ளனர்.
எனவே பாடசாலைகளில் பூரணமான கல்வி கிடைத்தாலே எமது கஷ்டங்கள் நீங்கும். கிளிநொச்சி கல்வி வலயத்தில் 4 கோட்டங்கள் உள்ளன.இதில் 110 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் போரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 101 பாடசாலைகளிலேயே இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இதில் ஆரம்பக் கல்விப் பிரிவுக்கு 65 ஆசிரியர்களும் இடைநிலையில் தமிழ் மொழி மூலமான கணித பாடத்துக்கு 28 ஆசிரியர்களும் ஆங்கில மொழி தமிழ் மொழி மூலமான கணித பாடத்துக்கு 8 ஆசிரியர்களும் தமிழ் மொழி மூலமான விஞ்ஞான பாடத்துக்கு 22 ஆசிரியர்களும் ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான பாடத்துக்கு 4 ஆசிரியர்களும் மற்றும் இடைநிலைப் பிரிவு ஏனைய பாடங்களுக்கு 143 ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர்.
ஜி.சீ.ஈ. உயர்தர கலைப் பிரிவுக்கு 7 ஆசிரியர்களும் வர்த்தகப் பிரிவுக்கு 19 ஆசிரியர்களும் விஞ்ஞான பிரிவுக்கு 11 பேரும் கணிதப் பிரிவுக்கு 5 ஆசிரியர்களுமாக ஒட்டு மொத்தமாக 331 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி மாவட்டமானது பல புத்திஜீவிகளையும் விற்பன்னர்களையும் உருவாக்கியுள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மட்டம் தேசிய மட்டங்களில் சாதனைகள் புரிந்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்,